176 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
புணர்தனிமித்தமும் குறிஞ்சியென விளக்கியபின், அவ்விலக்கணத்தில் அமையாத ‘கலந்த பொழுதை’யுங் ‘காட்சியை’யும் பிற சிலவற்றையும் புணர்வே போல் குறிஞ்சிப்பாற்படுமெனக் குறித்து வேறு சூத்திரம் கூறினதுபோலவே அக்குறிஞ்சியின் புறமான வெட்சியிலக்கணத்திலடங்காத துடிநிலை, கொற்றவை நிலைகளும் போர்த்துவக்கமாம் வெட்சியின்பாற்படுமென்பதை இச்சூத்திரத்தால் விளங்க வைத்தார். போரற்றபோது முழக்காதிருந்த முரசை யெடுக்குங்கால், பராவி யெடுப்பது பண்டை வழக்காமென்பதை, “மாசற விசித்த வார்புறு வள்பின் மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை யொலிநெடும் பீலி யொண்பொறி மணித்தார் பொலங்குழை யுழிஞையொடு பொலியச் சூட்டிக் குருதி வேட்கை யுருகெழு முரசம் மண்ணி வாரா வளவை. . . . . . ” (புறம். 50) என்னும் மோசிகீரனார் புறப்பாட்டாலும், “தூத்துகி லுடுத்துத் தொடியுடைத் தடக்கைக் கோத்தொழி லிளையர் பூப்பலி கொடுத்துச் செம்பொன் நெல்லின் செங்கதிர் சூட்டி வெண்டுகி லிட்ட விசய முரசம். ” என்ற பெருங்கதை, உஞ்சைக் காண்டத்து 39ஆவது காதை, 21-24 வரிகளின் குறிப்பினானும் அறிக. போர் விரும்பியோர் முதலில் வெற்றி கருதிக் கொற்றவையைப் பராவுதல், “வளையுடைக் கையிற் சூல மேந்தி கரியி னுரிவை போர்த்தணங் காகிய வரியி னுரிவை மேகலை யாட்டி சிலம்புங் கழலும் புலம்பஞ் சீறடி வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை . . . . . . . . . . . . . . . . . . . அமரிளங் குமரியு மருளினள் வரியுறு செய்கை வாய்ந்ததா லெனவே. ” என்னும் சிலப்பதிகார வேட்டுவ வரி 60-64, 73-74 வரிகளிலும், மற்றும் பழஞ்செய்யுள்களிலும் பரக்கக் காணலாம். |