பக்கம் எண் :

180நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

ஓங்கிருஞ் சென்னி மேம்பட மிலைந்த
இருபெரு வேந்தரும் ஒருகளத் தவிய
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்றாள்
கண்ஆர் கண்ணிக் கரிகால் வளவன்”

எனவரும் பொருநராற்றுப்படைஅடிகளில் ‘போந்தை’ ‘வேம்பு’ ‘ஆர்’ எனும் அடையாளப்பூ மூன்றும் அமரில் சூடும் பரிசு குறிக்கப்படுதல் காண்க.

(5) வாடா வள்ளி = வாடுங்கொடி யல்லாத வள்ளியென்னும் பெயருடைய கூத்தும்;

[‘வள்ளி’ என்பது வாடும் ஒரு கொடிக்கும் ஆடும் ஒருவகைக் கூத்துக்கும் பொதுப் பெயராதலால், ஓடாப் பூட்கை, வாடா வஞ்சி என்பனபோல, கொடியை நீக்கிக் கூத்தைச் சுட்டும் பொருட்டு இங்கு “வாடா வள்ளி” எனக் கூறப்பட்டது].

முருகனைப் பரசி வேல னாடுவது காந்தள்; அக்கடவுளைப் பாடிப் பெண்டிர் ஆடும் கூத்து வள்ளி. இது, மகளிர் மக்கட்டலைவனைப் புகழ்ந்து பாடும் உலக்கைப் பாட்டாகிய வள்ளை போலாது, காந்தளைப் போலவே ‘கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வரும்’ இவ்வியலில் பின்வரும் ‘கொடி நிலை காந்தள் வள்ளி என்ற. . . . . . . கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே’ எனும் சூத்திரத்தானும் இவ்வியல்பு விளங்கும்.

“பன்மர நீளிடைப் போகி, நன்னகர்
 விண்தோய் மாடத்து விளங்குசுவர் உடுத்த
 வாடா வள்ளியின் வளம்பல தரூஉம்
 நாடுபல கழிந்த பின்றை”

எனவரும் பெரும்பாணாற்றுப்படை அடிகளில், விண்ணுற வோங்கி விளங்கும் மதில் சூழ்ந்த மாடங்கள் நிறைந்த ஊர்களிலும் புறநாடுகளிலும் கடவுளைப் பரசிப் பெண்டிர் ஆடும் வள்ளிக் கூத்தின் வளப்பம் குறிக்கப்படுவதறிக.

(6) வயவர் ஏத்திய ஓடாக் கழல்நிலை = வென்றி மறவர் புகழும் புறங்கொடாவீறு குறிக்கப் பொருநர் காலில் அணியும் கழல் நிலையும்;