தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 181 |
[‘கழல்’ என்பது போர் வென்றிப் பெருமிதக் குறியாக மறம்பேணுந் திறலுடையார் காலில்பூணும் ஒரு அணி வகை. இதில் எண்ணும்மை தொக்கது. ] “ஓடாத் தானை ஒண்தொழிற் கழற்கால் செவ்வரை நாடன் . . . . . . ” எனும் பெரும்பாணாற்றுப்படை அடிகளில், மறக்குறியாகத் தானை காலில் கழலணியும் பரிசு கூறப்படுதல் காண்க. (7) ஓடா உடல் வேந்து உளப்பட அடுக்கிய உன்ன நிலையும் = பின் வாங்காது மலையும் வேந்தன் வெற்றியை உளத்தெண்ணி, சார்த்து வகையால் உன்ன மரத்தில் நிமித்தங்கொள்ளும் உன்ன நிலையும்: [‘உடல்வேந்து’ என்பது பொருபடை என்பது போன்றதோர் வினைத்தொகை; உடலும் வேந்து என விரியும். உடலுதல் = சினந்து பொருதல்; பகைத்தலுமாம]. உன்னம் = சிற்றிலையும் பொற்பூவுமுள்ளதோர் மரவகை. பண்டைத் தமிழ் மறவர் போர்க்கெழுமுன் உன்னமரக் கோட்டில் மாலைகளை அடுக்கி நிமித்தங்கொள்ளுவது வழக்காறு. [இனி, குறி பார்ப்பவர் தம் மன்னற்கு ஆக்கம் எனின் அம்மரக்கோடு தழைவதும், கேடுளதேல் அழிவதும் ஆகிய ஒரு கடவுட்டன்மையுண்டென்றும், அதனால் பொருநர் போருக்குமுன் அம்மரத்தைப் பரசிக் குறி கேட்பரென்றும், அவ்வாறு கேட்டலே உன்ன நிலையென்றும் உரைப்பாருமுளர்]. “முன்னங் குழையவும் கோடெலா மொய்தளிரின் றுன்னங் குழையொலித் தோங்குவாய் - மன்னரைக் கொன்று களங்கொள்ளுங் கொல்யானை வேந்தனை வென்றுகளங் கொள்ளுமேல் வேந்து. ” எனும் பழம்பாட்டு இவ் வுன்னநிலைத் துறையை விளக்குத லறிக. (8) மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பில் தாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும் = மாயோன் விரும்பும் நிலைத்த பெரிய சிறப்பினையுடைய கெடாத உயர்ந்த புகழினைக் குறிக்கும் காயாமலரால் நிமித்தங்கொள்ளும் பூவை நிலையென்னும் துறையும்; |