பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை185

எனவரும் அடிகளில், பொருநர் போர்க்குமுன் ஊர்க்குள் நெடுமொழி கூறும் வழக்குண்மை சுட்டல் அறிக.

(13) அனைக்குரி மரபினது கரந்தை, அன்றியும் = அத்தன்மைக்குரிய முறையால் வரும் நிரைமீட்சித் துறை வகை யெல்லாமும் கரந்தை வகையாகும், அல்லாமலும்:

‘அனைத்துச் சொல்’ அத்தன்மைத்து எனப் பொருள்படுதல், ‘அனைத்தாகப் புக்கியோய்’ எனும் 78ஆம் கலிப்பாட்டில் வருதலாலறிக. அனைத்துக்கு என நிற்கற்பாலது அனைக்கு எனக் குறுகியது, செய்யுளிசை நோக்கி: மனத்துக்கு என்பது மனக்கு எனவும், போருளதனைத்தும் என்பது போருளதனையும் எனவும், கம்பர் பாட்டுக்களில் இசை நோக்கிக் குறுகி வருதலும் காண்க.

இனி, ஆரமரோட்டல் முதல் கூறிய நான்கும் நிரை மீட்சிக்கே வுரியவாதலின், அவற்றைக் ‘கரந்தை’ என ஒருங்கு தொகுத்து, இதிற் கூறும் பிற வெட்சித் துறைகளினின்றும் வேறு பிரித்ததன் குறிப்பு ‘அன்றியும்’ எனுஞ் சொல்லிடைப்பெய்து விளக்கப்பட்டது. பின்னைய பிள்ளை நிலை இரண்டும் பிள்ளையாட்டு ஒன்றும் ஆக மூன்றும் கரந்தைக்கேயன்றிப் பிறவற்றிற்கும் ஏற்குமாதலின், அவை கரந்தைத் தொகுதியிற் கூட்டப்படாமல் வேறு பிரித்துக் கூறப்பட்டன. இதில் ‘கரந்தை’ என்பது தனித்துறையாகாமல் நிரைமீட்சித் துறை பலவற்றிற்குப் பொதுப் பெயராய்க் குறிக்கப்பட்டது. கரந்தை வெட்சித்திணை வகையாய்ப் பல துறைகளைத் தன்னுள் அடக்கி நிற்பதல்லாமல் தனித்தொரு துறையாகாமையால், அதற்குத் தனித்து மேற்கோட்செய்யுள் கூறுமாறில்லை. வெட்சியொடு கரந்தையை மயங்கவைக்கும் நச்சினார்க்கினியரும், கரந்தை வெட்சித் திணையாகாது எனக் கூறுகின்றார். ‘கரந்தையாவது தன்னுறு தொழிலாக நிரைமீட்டோர் பூச்சூடுதலாற் பேராதலின், வெட்சித்திணைபோல ஒழுக்கம் அன்று’ என்பது இச்சூத்திரத்தின் கீழ் அவர்தரும் குறிப்பாகும். மேலும், கரந்தையை ஒரு தனித் துறையாய்க் கொள்ளின், இங்கு மொத்தம் எழுமூன்று துறைத்தே எனக் கூறியதற்கு மாறாகத் துறையெண் 22 ஆகும். அது கூடாமையால், இதில் கரந்தையைத் தனித்துறையாய்க் கொள்ளாமல் நிரைமீட்சித் துறைகளுக்குப் பொதுப் பெயராகவே கொள்ள வேண்டுமென்பது தேற்றம். எனவே, இதனை ஒரு தனித்துறையாக்குதல் பொருந்தாமை வெளிப்படை.