பக்கம் எண் :

186நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

(14) வருதார் தாங்கல் = எதிர்த்து வரும் படையின் முன்னணியைத் தனித்து நின்று தடுத்தல்;

தார் என்பது படையணியைக் குறிக்கும். இதுவும் கரந்தை வகையேயாம்.

“ஒன்னார் முன்னிலை முறுக்கிப் பின்னின்று
 நிரையொடு வரூஉம் என்னை. ”

எனும் 262ஆம் புறப்பாட்டில் இத்துறை விளக்கம் காண்க. இது எதிரூன்றிப் பொரும் தும்பைத்திணைத் துறையாகாமல் வெட்சித் துறைக்குரியது என்பது ‘பின்னின்று நிரையொடு வரூஉம்’ எனும் குறிப்பால் தேறப்படும்.

(15) வாள் வாய்த்துக் கவிழ்தல் = பகைவர் வாளால் பட்டு வீழ்தல்;

“ஆளும் குரிசில் உவகைக் களவென்னாம்
 கேளின்றிக் கொன்றாரே கேளாகி - வாள்வீசி
 ஆடினார் ஆர்த்தார் அடிதோய்ந்த மண்வாங்கிச்
 சூடினார் வீழ்ந்தானைச் சூழ்ந்து. ”

எனும் பெரும்பொருள் விளக்கப் பழம் பாட்டில், வாட்போரில் வீழ்ந்தான் பெருமை கூறப்படுதல் காண்க.

என்று இருவகைப்பட்ட பிள்ளை நிலையும் = (வருதார் தாங்கல், வாள்வாய்த்துக் கவிழ்தல்) என இருதிறப்படச் சுட்டப்பட்ட பிள்ளை நிலைத் துறைகளும்;

மேலே சிறப்பாகக் கரந்தை வகை நான்கு கூறி அவற்றைத் தொகுத்துப் பொதுவாகக் கரந்தையெனக் கூறியது போல, இங்குத் தார் தாங்கல், கவிழ்தல் எனும் இருவகைத் துறைகளும் ‘பிள்ளைநிலை’ என்பதன் வகைகளாம் என்பதை விளக்கி இவ்விரண்டின் பின் ‘இருவகைப்பட்ட பிள்ளைநிலையும்’ என்று அவற்றின் தொகையும் பொதுப் பெயரும் கூறப்பட்டன. அஃதன்றிப் பிள்ளைநிலை எனத் தனித்தொரு துறை யின்மையால், துறை எழுமூன்றில் இது தனித்தெண் பெறாது.