தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 187 |
(16) வாள்மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க நாடவற்கருளிய பிள்ளையாட்டும் = (ஆகோளல்லாத வெட்சிப் போரில்) வாளால் பொருது வென்று வந்தவனை உவந்து முரசொலிக்க நாட்டை அவனுக்குப் பரிசிலாய் அளிக்கும் பிள்ளையாட்டென்னும் துறையும்: தனக்கு வெற்றி தந்த வீரனை வேந்தன் நாடுதவிப் பாராட்டுதல் நன்றிமறவா மறக்கட னாகும். இதற்கு, வாட்போரில் இறந்த மறவனுக்குத் துறக்கமாகிய நாட்டை அளித்த பிள்ளையாட்டென்று இளம்பூரணர் உரை கூறுவர். இதில் ‘எழுந்தோனை’ என்றதனால் இறவாமை தெளியப்படும்: இறந்தானை எழுந்தோனென்பது மரபன்று. அன்றியும் போரில் இறந்தவர்க்குத் துறக்க நாடு அருளுபவர் அவனைக் கொன்ற பகைவராவரன்றி இறந்த பொருநனின் வேந்தன் ஆகான். புறந்தராது பொருதுகளத்துயிர் கொடுத்தவனைத் தமரும் பகைவரும் பாராட்டிப் பரிந்திரங்குவர். அவன் இறந்தமைக்கு மகிழ்வது நன்மக்களியல்பன்று. ஈண்டு ‘மகிழ்ந்து நாடவர்க் கருளிய’ பரிசு கூறுதலானும், அஃதுரையன்மை ஒருதலையாம். “வன்கண் மறமன்னன் வாண்மலைந்து மேம்பட்ட புன்தலை யொள்வாட் புதல்வர்க்கண் - டன்புற்றுக் கான்கெழு நாடு கொடுத்தான் கருதார்க்கு வான்கெழு நாடு வர. ” என வரும் பழம் பாட்டும் இளம்பூரணர் உரையை மறுத்துப் பகைவர் வானாடுபெற வென்றுவந்தவர்க்குப் பரிசிலாய் மன்னன் மண்ணாடு கொடுக்கும் பரிசே குறிப்பதறிக. (16 முதல் 21) காட்சி = பொருது வீழ்ந்தார்க்கு நடுதற்பொருட்டுத் தக்கதோர் கல்லைத் தேர்ந்து காணல்; கால்கோள் = தேர்ந்து கண்ட கல்லைக் கொணர்தல்; நீர்ப்படை = விழாவொடு அக்கல்லைத் தூய நீரால் குளிப்பித்தல்; நடுதல் = பிறகு அதனை எடுத்து நடுதல்; சீர்த்தகு மரபிற் பெரும்படை = சிறந்த முறையில் நாட்டிய கல்லுக்கு மிக்க பலியுணவு படைத்தல்; வாழ்த்தல் = அவ்வாறு கடவுளேற்றிப் பலியூட்டிய அக்கல்லைப் பழிச்சுதல்; என்று இரு மூன்று வகையில் கல்லொடு புணர = இவ்வாறு அறுதிறப்படும் நடுகல் துறைகளோடு சேர்ந்து; |