பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை291

குறிப்பு : இதில், கபிலை என்பது அந்நிறமுடைய பசுவுக்கு ஆகுபெயர். இதனை “ஆக்கொடை” என்பர் பழைய உரைகாரரிருவரும். இதற்குச் செய்யுள் :

“நன்றாய்ந்த நீணிமிர்சடை” எனும் மூலங்கிழார் புறப்பாட்டில் (166)

“காடென்றா நாடென்றாங்
 கீரேழி னிடமுட்டாது
 நீர்நாண நெய்வழங்கியும்
 எண்ணாணப் பலவேட்டும்,
 மண்ணாணப் புகழ்பரப்பியும்,
 அருங்கடிப் பெருங்காலை
 விருந்துற்றநின் திருந்தேந்துநிலை
 என்றும் காண்கதில் லம்ம. ”

எனவருவதிது. இதில், பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணத்தாயன் காட்டுப்பசு ஏழுவகை நாட்டுப்பசு ஏழுவகையாகப் பதினாலு வகைப் பசுவால் வேட்டபுகழை மூலங்கிழார் குறித்தல் காண்க. இது பார்ப்பன வாகைப் பாடாண்.

பொருள் : (7) வேலினோக்கிய விளக்குநிலையும் = மறத்தால் காத்து அறத்தா லோச்சும் செங்கோல் மாட்சி விளங்கும் விளக்குநிலை என்னுந் துறையும்;

குறிப்பு : இதில், ‘ஓக்கிய’ என்பது ஓச்சிய என்பதன் மரூஉ. இனி, “வேலைநோக்கிய விளக்குநிலை” எனப் பாடங்கொள்வர் இளம்பூரணர். அதுவுமிப்பொருளே குறிப்பதாகும். இருளொழித்து ஒளியுதவும் விளக்குப் போல, நாட்டில் வேந்தர் வேலும் கோலும் தீதகற்றி நலம் தருவதை விளக்குந்துறை என்பது கருத்து. “வேல்” காவற்கும், “கோல்” முறை செய்தற்கும் ஆகுபெயர்கள், இதற்குச் செய்யுள் வருமாறு :

“இருமுந்நீர்க் குட்டமும்”எனும் புறப்பாட்டில் (20)

“செஞ்ஞாயிற்றுத் தெறலல்லது
 பிறிதுதெற லறியார்நின் னிழல்வாழ் வோரே
 . . . . . . . . . . . . . . . . . .
 பகைவ ருண்ணா அருமண் ணினையே