368 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
பொருள் : ‘தெய்வமஞ்சல்’ முதல் ‘புறஞ்சொல் மாணாக்கிளவி’ வரை கூட்டிக் கூறிய பத்தும் அகத்திணையுட் சிறந்த கற்புக்காதற்குப் பொருந்தும் மெய்ப்பாடுகள் என்றவாறு. குறிப்பு : ஈற்றேகாரம் அசை. ஒடு பிரிந்து சென்றொன்றும் எண்ணிடைச்சொல். பத்தும் என்பதன் உம்மை இனைத்தென அறிந்த முற்றும்மை. செப்பிய பத்தும் சிறந்த பொருளே எனச் சொன்மாறுக. அன்றிச் சொற்கள் நின்றாங்கே கொண்டு, மாணாக் கிளவியொடு கூட்டி எண்ணி, “உயர்ந்த கற்புக்குறியாய்ச் சிறந்த பத்து மெய்ப்பாடுகளும் மேல் அழிவில்கூட்ட மெனக் குறித்த கற்பொழுக்கத்திற்குரிய” என்றுரைப்பினும் அமையும். இதில் ‘பொருள்’ என்பது, ஈற்றடியைச் சொன்மாறிக் கண்ணழிப்பின் மெய்ப்பாடுகளையும், நின்றாங்கே கொள்ளின் கற்பொழுக்கையும் குறிப்பதாகும். பின்னுரைக்குப் பத்தும் என்பதைப் பத்து மெய்ப்பாடும் எனக் கொள்ளல் வேண்டும். இனித் ‘தெய்வமஞ்ச’லாவது சூள்பொய்த்தல் பரத்தையர் கூட்டம் முதலிய தலைவன் தவறுகளுக்குக் கடவுள் அணங்குமெனத் தலைவி அஞ்சுவதாம். தெய்வம் தொழாது கணவற்றொழுவதே நல்லில்லாட்டியர் தொல்லற மாதலின், தெய்வம்பரவுதல் என்னாது அஞ்சல் என்று அமையக்கூறிய பெற்றியும் கருதற்பாற்று. “மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள் கொடியோர்த் தெறூஉம் என்ப; யாவதும் கொடிய ரல்லர்எம் குன்றுகெழு நாடர், பசைஇப் பசந்தன்று நுதலே, ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் றோளே” (குறுந். 87) என்னும் கபிலர் செய்யுளும், தலைவி வழிபாடுகூறாது, அணங்கும் கடவுளை அஞ்சுதலளவே குறித்தமை அறிக. ‘புரையறந் தெளிதல்’ என்பது உயர்ந்த மனையறம் உணர்ந்தோம்புதல். ‘புரை’ ஈண்டு உயர்ச்சிப் பொருட்டு. “இதுமற் றெவனோ தோழி! துனியிடை இன்னர் என்னும் இன்னாக் கிளவி |