370 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
என்பதில் கற்புக்காதலில் பொழுதுவரையறையின்மை சுட்டியது காண்க. இத்தொடரைப் ‘புணர்ந்துழியுண்மை’, ‘பொழுது மறுப்பாக்கம்’ எனப் பிரித்தெண்ணிப் பதினொன்றாக்குவர் பேராசிரியர். இது ‘சிறந்த பத்தும்’ எனத் தெளித்துக் கூறிய சூத்திரச் சொற்றொடர்ச் செம்பொருளொடு முரண்படுவதால், அஃதுரையன்மை அறிக. பதினொன்றைப் பத்தென எண்ணலாமெனுந் தன் கொள்கைக்கு, “ஒன்பதும் குழவியொடிளமைப் பெயரே” எனு மரபியற் சூத்திர அடியை மேற்கோள் காட்டினார். மரபியற் சூத்திரத்தில், “ஒன்பதும் குழவியொடு” என்பதைக் “குழவியொடு ஒன்பதும்” என மொழிமாற்றினும் எண், பத்தாகாமல் ஒன்பதே யாகும். இங்கு, மொழி மாற்றினும் பேராசிரியர் கொண்டபடி எண் பத்தாகாமல் பதினொன்றாகின்றதாதலின், சொல்லொடு பொருள் முரண எண்ணுவதற்கு அம் மரபியற் சூத்திரம் மேற்கோளாகாமை வெளிப்படை. இனி, முதலுரை வகுத்த இளம்பூரணர் இச்சூத்திரத்தில் மெய்ப்பாடு பத்தெனவே எண்ணினார். எனின், அவர் இத்தொடரைப் பிரித்திரண்டாக்கி, மறைந்தவை யுரைத்தல் புறஞ்சொல்மாணாக்கிளவி எனும் வேறுபடும் இரண்டை இணைத்து ஒன்றாக்கிப் பத்தெண்ணி, அமைவுகாட்டுவர். மறைந்தவை யுரைத்தல் தனி மெய்ப்பாடாதலானும், புறஞ்சொல்மாணாக் கிளவிக்கு இவ்வடை வேண்டப்படாமையானும், அவ்விரண்டையும் இணைத்தல் ஏலாமை அறிக. மேலும் புணர்ந்துழி உண்மையைப் பிரிப்பதால் போதரும் பொருட்சிறப்பின்மையும், அது சூத்திரக் கருத்தன்மையை வலியுறுத்தும். ஆதலின், இத்தொடரை நின்றாங்கே ஒரு தொடராக்கொண்டு, அதன் செம்பொருளுரைப்பதே சூத்திரக் கருத்தாதல் தெளிவாம். ‘அருள்மிகவுடைமை’யாவது முன் களவில் தலைவனருளை வேண்டிய தலைவி, கற்பில் தானவனை அருளொடு பேணும் பெற்றி. “நெடிய திரண்ட தோள்வளை நெகிழ்த்த கொடிய னாகிய குன்றுகெழு நாடன் வருவதோர் காலை இன்முகந் திரியாது கடவுற் கற்பின் அவனெதிர் பேணி மடவை மன்ற நீயெனக் கடவுபு துனியல், வாழி தோழி! சான்றோர் |