372 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
நிரைவளை யூருந் தோளென உரையொடு செல்லு மன்பினர்ப் பெறினே” (அகம். 255) ‘மறைந்தவையுரைத்த’லாவது முன் ஒளித்த நிகழ்ச்சி பின் உவந்தெடுத் துரைப்பது. “. . . . . . . . . . . வளங்கே ழூரனைப் புலத்தல் கூடுமோ தோழி!. . . . . . . . . . . . . . மார்பகம் பொருந்தி முயங்கல் விடாஅல் இவையென மயங்கி யானோம் என்னவும் ஒல்லார் தாமற் றிவைபா ராட்டிய பருவமு முளவே, இனியே . . . . . . . . . . . . . . . . . . நெஞ்சறை போகிய அறிவி னேற்கே” (அகம். 26) என்னும் பாட்டில் மறைவில் நிகழ்ந்ததை மனைவி பின்னர்த் தோழிக்கு எடுத்துரைக்கும் காதல்மாட்சியைக் கண்டு தெளிக. ‘புறஞ்சொல்மாணாக் கிளவி’ - தலைவனைப் புறந்தூற்றும் புன்சொற்பொறாத தலைவி அதை வெறுத்து மறுப்பது. “அருவி வேங்கைப் பெருமலை நாடற்கு யானெவன் செய்கோ என்றி, யானது நகையென வுணரே னாயின் என்னா குவைகொல் நன்னுதல் நீயே” (குறுந். 96) என்னும் பாட்டில் தலைவனைப் புறம்பழித்த தோழியைத் தலைவி வெகுளு மிம்மெய்ப்பாடு விளக்கப் பெறுதலறிக. புறஞ்சொல் நன்றாகாதென வெறுக்குந் தலைவியின் மறுப்புரை, புறஞ்சொல் மாணாக்கிளவி என்று கூறப்பட்டது. இனி, முன் களவியலில் ‘வேட்கை ஒருதலை உள்ளுதல்’ என்னும் சூத்திரத்தில், வேட்கை முதல் சாக்காடீறாகக் கூறிய பத்தும் களவிற்குச் சிறந்தனவாதலின், அவை, “சிறப்புடை மரபினவை களவென மொழிப” எனக் குறிக்கப்பட்டன. அதுவேபோல், இங்குக் கூறிய பத்தும் கற்பிற்குச் சிறந்தனவாதலின், “சிறந்த பத்தும் செப்பிய பொருளே” எனப்பட்டன. இன்னும், கரந்தொழுகலால் காமஞ் சாலாத களவினும், வரைந்து உலகறிய |