| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 375 |
நிலையாமையானும், அதுவும் விலக்காயிற்று. புறமொழி = பழி தூற்றுதல்; இல்லாட்கு நல்லறம், “புறஞ்சொல் மாணாக்கிளவி”யென முன் கூறியதனாலும், பழிதூற்றும் தவறுடைமை காதல் வாழ்வுக்கு ஏதம்பயக்குமாதலாலும், அது விலக்குதற்குரிய இழுக்காயிற்று. வன்சொல் = வருத்தமுறுத்தும் கடுஞ்சொல்; பொச்சாப்பு = சோர்வு. இஃது உவகை மகிழ்ச்சியிற் பிறப்பதாகலின், காதற்கடனிகந்து ஏதந்தரும் தவறாகும். மடிமை = சோம்பர்; குடிமையின்புறல் = தலைவி தன் குடியுயர்வுள்ளி யுவத்தல்; இது கற்புறுகாதலுக் கொல்லாது. முன் களவியலில் இருவர்க்கும் குடிமை ஒப்புமை நன்றாம், அன்றேல் தலைவன் மிக்கோனாதல் தவறாகாது எனக் கூறி, எஞ்ஞான்றும் தலைவி உயர்வைத் தவிர்த்தது; அது தலைவனுக்கு இழிவுணர்த்தி ஏதம் விளைக்குமாதலின். அதனால் அது மெய்க் காதலுக்கு இழுக்காயிற்று. ‘ஏழைமை’ இங்கு எளிமை, அதாவது தணிவுப் பொருட்டு. தணிவுணர்வு மறப்பது அன்பொழுக்கத்திற்காகாத தவறு. இனி, ஏழைமை வெண்மையறிவெனின், தலைவிக்கு வேண்டப்படும் புரையறமறிதல் கூடாதாகலின், அது பொருளன்று. அஃகி அகன்ற அறிவுடையளாயினும், பிற பெருமை அனைத்துமுடையளாயினும், தணிவொடு பணிதலும், தாழ்ந்தவனெனினும் தலைவனுயர்வு தன்னுள்ளத்து நிறுத்தலும் காதற்றலைவிக்கு வேண்டும். அதனால், தலைவி தன்தாழ்வுமறத்தல் இல்லறக்காதலுக்கு
-* “வணிகனும் தன்கைப் புக்க மாங்கனி பின்னைக் காணான் தணிவரும் பயமேற் கொள்ள உள்ளமுந் தடுமா றெய்தி அணிகுழ லவரை வேறோர் அணங்கெனக் கருதி நீங்குந் துணிவுகொண் டெவர்க்குஞ் சொல்லான் தொடர்பின்றி யொழுகுநாளில். ” “மற்றவர் தம்மை நோக்கி மானுட மிவர்தா மல்லர் நற்பெருந் தெய்வ மாதல் நானறிந் தகன்ற பின்பு பெற்றவிம் மகவு தன்னைப் பேரிட்டே னாத லாலே பொற்பதம் பணிந்தேன் நீரும் போற்றுதல் செய்ம்மின் என்றான்” (காரைக். அ. பு. 31. 47) கற்பறக்காதல் வாழ்விற் காரைக்காலம்மையாரின் அற்புதச் செயல் கண்டு அவ்வம்மையை அணங்கென மருண்ட பரமதத்தனுக்குக் காதல் நீங்கியதால், வியப்பு காதலுக்கு ஏலாக்குற்றமாதல் காண்க. |