தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 377 |
கூறுதல் நோக்க, ஈண்டு மவ்வாறு பத்தெனக் கொள்வதே ஏற்புடையதாகும். இனி, “இன்மை என்மனார்” என்பதைக் காதலர்க்கு இன்மை வேண்டும் என விரித்தது, பொருள் விளங்கும் பொருட்டும், “இன்மை வேண்டும்” என நிற்பிற் பொருள் முடிமையானும் என்க. கூறிய பத்துக்குற்றங்கள் உள்வழி, உண்மைக்காதல் நிலையாதாதலின், காதல் மெய்ப்பாடுகளைக் காணுதல் அவையற்ற இடத்தாமெனச் சுட்டுதற்கு அவை இவ்வியலிறுதியிற் கூறப்பட்டன. சூத்திரம் : 27 | | | கண்ணினும் செவியினும் திண்ணிதின்உணரும் உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின் நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே. |
கருத்து : இது மெய்ப்பாடுகளுக்குப் பொதுப் புறனடையாய், அவற்றினியல்பும் குறிப்பும் நுண்ணிறிவில்லார்க்கு எண்ண வொண்ணாமையும் கூறுகின்றது. பொருள் : கண்ணினும் செவியினும் நுண்ணிதின் உணரும் உணர்வுடை மாந்தர்க்கல்லது = காண்பதும் கேட்பதும் ஆசற ஆயும் நுண்மாண் நுழைபுலனுடையார்க்கன்றி; நன்னயப் பொருள்கோள் = சிறந்த நயத்தகு மெய்ப்பாடுகளின் இயல்பும் குறிப்பும் உணர்ந்துகோடல்; தெரியின் = ஆராயுங்கால்; எண்ணருங்குரைத்து = நினைத்தற்கரிது. குறிப்பு : முதலிருசொல்லி னும்மைகள் எண்குறிப்பன. குரையும், ஈற்றேகாரமும் அசைகள்; மெய்ப்பாடு உள்ளுணர்வைக் கொள்ளுதற்குதவும் குறிப்பாய்ச் சொல்லினும் செயலினும் தோற்றுமாதலின், கண்டதும் கேட்டதும் யாப்புறக் கொண்டு அது விளக்கும் உளக்கிடையளக்கும் நுண்ணுணர்வு அருமைத்தென்பதைத் தெரிப்பது இச்சூத்திர நோக்காம். “ஐயப் படாஅ தகத்த துணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல்” (குறள். 702) எனும் பொருளுரையில், கூறாது நோக்கிக் குறிப்பறிதலின் அருமை கூறப்படுதலறிக. |