பக்கம் எண் :

 379

தொல்காப்பியர் பொருட்படலம்

உள்ளுறைகள்

உள்ளுறை என்பது புதைபொருள். சொற்களின் செம்பொருளன்றிக் ‘கூற்றினகத் தடங்கிநின்று உய்த்துணரத் தோன்றும் மறைபொருளை உள்ளுறை’ என்பர் தமிழ்நூற்சான்றோர். உள்ளுறை என்பது வெளிப்படையின்றிக் கூற்றினுள்ளே குறிப்பாய் உறைவது (தங்குவது) எனப் பொருள்படும். எனவே, கூறிய சொற்பொருளின் புறத்தே குறிப்பிற் கொள்ளுமாறு கூற்றினுள்ளே எஞ்சி நிற்கும் பிறிதொரு பொருளே உள்ளுறை அல்லது எச்சம் எனப்படும். குறிப்பிற் கொள்ளும் உட்பொருள் சொற்களிலும் சொற்றொடர்களிலும் அமைதல் கூடும். சொல்லெச்சக் குறிப்பியல்களைத் தொல்காப்பியர் சொற்படலத்தில் ‘எச்சம்’ ‘குறிப்பு’ எனப் பலவாறு சுட்டி விளக்கினார். சொற்றொடர்களாலமையும் செய்யுளில் புலவர் தங்கருத்தைப் பட்டாங்குக் கூறுவது தவிர, மறைபொருளாகத் துறைபல புனைந்து உய்த்துணரவைக்கும் உள்ளுறைகளைத் தொகுத்து அவை (1) தம்மியல்பால் இருதிறப்படுமெனவும், (2) கூறும் புலவர் குறிக்கோளால் ஐந்து வகைப்படுமெனவும் பொருட்படலத்தில் விளக்கியுள்ளார்.

I.   செய்யுளுறுப்பாம் உள்ளுறைகள் தம்மியல்பால் இருவகையாமாறு:

(1)  சொற்பொருளின் வேறாய்க் குறிப்பிற்றோன்றும் மறைபொருளைக் கூறுஞ்சொற் றுணைகொண்டே நுனித்தாய்வோர் உய்த்துணரத் தோற்றுவிக்கும் கூற்றைச் “சொல்லொடுமுடிவு கொளியற்கை புல்லிய கிளவி” எனவும், (2) புலவன்