380 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
நோக்குணர்த்தக் கூற்றுச்சொல் துணையாகாமல், கூறும் முறை ஒலி முதலிய பிற அடையாளம் அல்ல குறிப்பால் அதனை உய்த்துணர வைக்கும் கூற்றைக் “குறிப்பொடு முடிவு கொளியற்கை புல்லிய கிளவி” எனவும், தொல்காப்பியர் செய்யுளியல் விளக்குகிறது. “சொல்லொடும் குறிப்பொடும் முடிவுகொ ளியற்கை புல்லிய கிளவி எச்ச மாகும்” (செய்யுளியல். சூ. 198) என்பது இதுபற்றிய செய்யுளியற் சூத்திரம். (1) சொல்லொடு முடிபுகொள் உள்ளுறைக்குச் செய்யுள்: “பைங்காற் கொக்கின் புன்புறத் தன்ன குண்டுநீ ராம்பலுங் கூம்பின, இனியே வந்தன்று வாழியோ மாலை, ஒருதா னன்றே கங்குலு முடைத்தே” (குறுந். செய்யுள். 122) இதில், “வாழியோ” என்ற சொல் குறிப்புமொழியாய், நோய்தரவந்த மாலையைத் தனிமையால் நொந்து வெறுக்கும் தலைவியுணர்வைச் சுட்டி முடிவு கொள்ளுதலறிக. “வெட்சிக் கானத்து” என்னும் (புறம். 202 ஆம்) பாட்டில், பாரிமகளிரைக் கொள்ள மறுத்த இருங்கோவேளை வெறுத்துக் கூறுங் கபிலர் “கைவண்பாரி மகளிரென்ற வென், தேற்றாப் புன்சொல் நோற்றிசிற் பெரும! விடுத்தனென், வெலீஇயர் நின்வேலே” என்றதுமிவ்வகைக் குறிப்பு மொழியே என்பர் புறநானூற்றின் பழையவுரைகாரர். “ஒல்லுவதொல்லும்” (புறம். 196) எனும் ஆவூர்மூலங்கிழார் பாட்டில், “. . . . . . . . . . . . அனைத்தா கியரினி யிதுவே, எனைத்துஞ் சேய்த்துக் காணாது கண்டன மதனால் நோயில ராகநின் புதல்வர்; யானும் . . . . . . . . . . . . . செல்வ லத்தை; சிறக்கநின் னாளே” எனும் வாழ்த்து மித்தகைத்தாதலுங் காண்க. (2) இனி, குறிப்பொடு முடிவுகொள் ளியற்கைய உள்ளுறை வருமாறு: |