பக்கம் எண் :

382நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

“அவைதாம் தத்தம் குறிப்பின் எச்சமாகும்” எனும் 44ஆம் சூத்திரத்திலும், சொல்லெச்சம் “சொல்லெனெச்சம், முன்னும் பின்னும் சொல்லள வல்லது எஞ்சுதலிலவே” எனும் 45 ஆம் சூத்திரத்திலும் தனித்தனியே விளக்கப்பட்டிருப்பதாலும், சொல்லிலக்கிணத்தின் பாற்பட்ட அவ்வெச்சங்கள் அமைவுபட ஆண்டுச் சொற்படல எச்சவியலில் கூறப்பெற்றவற்றையே ஈண்டுச் செய்யுளியலில் மீண்டும் கூறும் குற்றமுடையர் தொல்காப்பியர் என்பது பொருந்தாமையாலும் இச்செய்யுளியற் சூத்திரத்திற்குப் பழைய உரைகாரர் கூறும் பொருள் பொருந்தாமை அறிக.

 II.    இனிச் செய்யுளை ஆக்கும் புலவனின் நோக்கங்கொண்டு உள்ளுறை ஐந்துவகைப்படும் என்பதைத் தொல்காப்பியர் “உடனுறை, உவமம், சுட்டு, நகை, சிறப்பெனக் கெடலரு மரபின் உள்ளுறை ஐந்தே” எனும் பொருளியல் 46ஆம் சூத்திரத்தால் விளக்கினர்.

(i)  இவற்றுள் உடனுறை என்பது இறைச்சியாகும். ஒரு கூற்றில் வரும் சொற்களின் வெளிப்படைச் செம்பொருளின் வேறாய் அக்கூற்றில் உள்ளுறுத்திறுவது ‘இறைச்சி’ அல்லது ‘உடனுறை’ எனப்படும். ‘இறுதல்’, ‘இறைச்சி’ என்பன ‘தங்குதல்’ அதாவது ‘அடங்கி நிற்பது’ எனும் பொருள் தரும். எனவே, ஒரு கூற்றில் அதன் மொழிப் பொருளின் புறத்தே “திறத்தியல் மருங்கிற்றெரியுமோர்க்கே” உய்த்துணரப் புலனாகும் புதைபொருளை இறைச்சி எனவும், உடனுறை எனவும் வழங்குவர் பண்டைப் புலவர். அது, “இறைச்சி தானே பொருட் புறத்ததுவே” (சூ. 33). “இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே” (சூ. 34) “அன்புறு தகுந” . . . (சூ. 35) எனும் பொருளியற் சூத்திரங்களால் விளக்கப்படும். இறைச்சியா முள்ளுறைக்குச் செய்யுள்:

“நசைபெரி துடையர், நல்கலு நல்குவர்;
 பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
 மென்சினை யாஅம் பொளிக்கும்
 அன்பின, தோழி! அவர்சென்ற வாறே”

(குறுந். 37)

இக்கூற்றில் ஒப்புக்குறிப்பின்மையால் உள்ளுறையுவமம் கொள்ளற்கில்லை. எனில், ஆண் யானை தன் பிடியின் பசி தீர்க்க யாமரத்தின் பட்டையுரித்தூட்டும் காதற் காட்சியுடைய வழியிற் சென்ற தலைவன் அக்காட்சியாற் றலைவியைத் தான்