பக்கம் எண் :

386நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

இது, தொண்டைமானை ஒளவை புகழ்வது போலப் பழிப்பதால், வசைகரந்த அங்கதமாம் ‘நகை’ என்னும் உள்ளுறையாதல் காண்க.

இதன் பிற்பகுதி அதிகமானைப் பழிப்பதுபோலப் புகழும் சிறப்பென்னும் உள்ளுறையாதலுமறிக.

 III.   இனி, உள்ளுறை உவமம், இறைச்சி, இவை தம்முள் அறியக்கிடக்கும் வேறுபாடுகளும், இவற்றிற்கும் சுட்டு என்னும் உள்ளுறைக்குமுள்ள ஒற்றுமை வேற்றுமைகளும் பற்றிப் பல்காலும் பலவாறு மயக்கம் நேருகிறது. அதனால் அவற்றின் இயல்பையும் சிறிதாராய்ந்து தெளிய முயல்வது ஈண்டு வேண்டப்படுவதாம். ஆகவே, இவற்றினியல் விளக்கும் தொல்காப்பியர் சூத்திரங்களால் தேறத்தகுவனவற்றைத் தேர்ந்து தெளிதல் இன்றியமையாதது.

 III.   (i)  (1)  ‘உள்ளுறை உவம’த்தை அகத்திணை இயலில் மூன்று சூத்திரங்களால் விளக்குவர். (1) “உள்ளுறை உவமம், ஏனை உவமமெனத் - தள்ளா தாகும் திணையுணர் வகையே” (அகத். சூ. 45)

குறிப்பால் வரும் ‘உள்ளுறை உவமம்’, செவ்வொப்பணிபோலாது, யாண்டும் காதலொழுக்கம் உணர்த்துதல் தவிராது என இச்சூத்திரத்திற்கூறி, இவ் வீருவமங்களுள் உள்ளுறை உவமத்தின் இயல்பை அடுத்த சூத்திரத்தாற் கூறுவர்.

(2) “உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலனெனக்
கொள்ளும் என்ப குறியறிந் தோரே”
 (அகத்திணை. சூ. 46)

என்பது இரண்டாம் சூத்திரம். இதனால் தெய்வம் தவிரப் பிற கருப்பொருள்களுள் ஒன்றைக் களனாகக் கொண்டே உள்ளுறை உவமம் வரும் என்பது பெறப்படுகின்றது. கூறப்படும் கருப்பொருட் செய்தியே ஒப்பாய், கூறக்கருதிய பொருள் அவ்வொப்பின் உள்ளுறையாய்ப் புலனன்குணர்வோர்க்கு உய்த்துணரத் தோன்றும் கூறாக் குறிப்பாய்க் கருப்பொருளில் மறைந்து தோன்றுவதே உள்ளுறை உவமத்தின் இயலாதலின், கருப்பொருட் டொடர்பு இதற்கு இன்றியமையாததாகும்.

(3) “உள்ளுறுத் திதனோடு ஒத்துப்பொருள் முடிகென
உள்ளுறுத் திறுவதே உள்ளுறை உவமம்”
  (அகத்திணை. சூ. 47)