தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 387 |
என்பது இவ் வுவமம் பற்றிய மூன்றாம் சூத்திரம். உள்ளுறை உவமத்துக்குக் கருப்பொருட்சார்பு இன்றியமையாததென முன் சூத்திரத்திற் கூறி, இதில் ‘கூறப்படும் கருட்பொருட்செய்தியே வெளிப்படு பொருளாய் நிற்க, அதனகத்தடங்கி அச்செய்தியே ஒப்பாகி, அதை ஒத்துக் கூறக்கருதும் பொருள் குறிப்பால் உணர நிற்பதே ‘உள்ளுறை உவமம்’ என்று அதனியல் விளக்கப்பட்டது. எனவே, இம்மூன்று சூத்திரங்களால் முறையே உள்ளுறை உவமம், (1) அகத்திணைவகை உணர்த்தல் தவிராதென்பதும், (2) கருப்பொருட் செய்தியுள் கூறாக் குறிப்பாய் அடங்கி நிற்பதும், (3) அக் கருப்பொருட் செய்தியே ஒப்பாய், அவ்வொப்புக் கேற்ப அதை உய்த்துணர்வோர்க்குக் கருதியபொருள் புலப்படுமாறு அமைவதும், இவ் வுவம உள்ளுறையின் இயல்களெனத் தெளிக்கப்பட்டது. சுருங்கச் சொல்லின், உள்ளுறை உவமம் (1) ஒப்பு அல்லது உவமத்தின் ஒருவகையாய், அகவொழுக்கவகை விளக்கத் தவிராதென்பதும், (2) அது தெய்வம் தவிர யாதானும் ஒரு கருப்பொருளைக் கந்தும் களனுமாய்க் கொண்டே வருமென்பதும், (3) அடைவுபடக் கூறப்பட்ட கருப்பொருட் செய்தியினடங்கி அதுவே ஒப்பாக அவ்வொப்புக்கேற்ற பிறிதொரு பொருளாய்க் கூற்றின் புறத்தே குறிப்பால் உணரத் தோன்றும் என்பதும், இம் மூன்று சூத்திரங்களின் கருத்தாகக் காண்கின்றோம். “இருஞ்சா யன்ன செருந்தியொடு வேழம் கரும்பின் அலமரும் கழனி ஊரன்” (ஐங். 18) இதில் ‘வாட்கோரையொடு கொறுக்கைப்புல்லும் கரும் போடசையும் வயலூரன்’ என்றது, பரத்தையர் தம்பாங்கியரொடு ‘குலமகளிரொப்பச் செம்மாக்க அவர்பால் ஒழுகும் தலைவன்’ என்பதைக் குறித்தலால், இது கருப்பொருளை நிலனாகக் கொண்டெழுந்த உள்ளுறை உவமமாயிற்று. III. (i) (2) இனி, ‘இறைச்சி’யாவது ஒரு கூற்றின் புறத்தே அதன் மொழிப்பொருளின் வேறாய் நுனித்து நோக்குவார்க்கு மட்டும் குறிப்பாலறியத் தோன்றும். மறைபொருளாம். இதனை ‘வியங்கியம்’ எனவும், ‘தொந்யார்த்தம்’ எனவும் கூறுவர் வடநூலார். இவ்விறைச்சியியல் (அ) “இறைச்சிதானே பொருட்புறத்ததுவே” எனும் பொருளியற் சூத்திரத்தால் பெறப்படுகின்றது. இதில் கூறப்பட்ட ‘பொருள்’ என்பது கூற்றின் |