பக்கம் எண் :

388நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

சொற்பொருளையே குறிக்கும். “எழுத்தொடும் சொல்லொடும் புணராதாகிப் பொருட் புறத்ததுவே குறிப்பு மொழியாகும்” என்பதனாலும் தொல்காப்பியரின் இக்கருத்து வலியுறுதல் காண்க. இது கருப்பொருளைப் பற்றிவருமென யாண்டும் தொல்காப்பியர் கூற்றானும் குறிப்பானும் உணர்த்தாமையின், அஃதவர் கருத்தன்மை அறிக. “இறைச்சிதானே உரிப்புறத்ததுவே” எனும் பாடம் ஏடு பெயர்த் தெழுவோர் பிறழக் கொண்டதாகத் தோன்றுகிறது. உரிப்பொருட்சிறப்பை விளக்கும் அகத்துறைச் செய்யுளில் உள்ளுறை உவமம் போலவே பெருவழக்காய் ஆளப்படுவது இறைச்சி. இறைச்சியால் உணர்த்தப்படுவது உரிப்பொருளேயாகும். அதனால் உரியையே சிறப்பாய் விளக்கும் இறைச்சியை ‘உரிப்புறத்தது’ எனக் கூறுவது அதனியலுக்கு முரணாவதால், அப்பாடம் பொருந்தாமை அறிக.

இச்சூத்திரத்தின் நேரிய பாடங்கொண்ட நச்சினார்க்கினியர் ‘உவமம் சுட்டாக் கருப்பொருள் தன்னுள்ளே தோன்றும் பிறிதொரு பொருளைக் குறிப்பது இறைச்சி’ எனச் சூத்திரத்திற்குப் பொருள் கூறுவர். கருப்பொருளின் சார்பு உள்ளுறை உவமத்துக்குப்போல இறைச்சிக்கும் வேண்டப்படுவதான குறிப்பே இறைச்சி பற்றிய தொல்காப்பியர் சூத்திரங்கள் ஒன்றிலேனுமில்லாதது கருதற்பாலது கருப்பொருட் சார்பு இறைச்சிக்கும் இன்றியமையாததாக நச்சினார்க்கினியர் கொண்டதனாலேயே, கருப்பொருளையே பற்றுக் கோடாய்க் கொண்டுவரும் உள்ளுறை உவமத்துக்கும் அதை வேண்டாத இறைச்சிக்கும் வேறுபாடு விளங்காமல் மயங்க நேர்ந்தது.

(ஆ) “இறைச்சிற பிறக்கும் பொருளுமா றுளவே
திறத்தியல் மருங்கில் தெரியு மோர்க்கே”
 (பொருளியல். சூ. 34)

எனும் பொருளியற் சூத்திரத்தையும், இறைச்சியினியல்பே கூறுவதாகக் கொண்டு அதற்கு வேறுபொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். இவர், இறைச்சி கருப்பொருளைச் சார்ந்தே வருமெனக் கருதினாராதலின், இச்சூத்திரம் கருப்பொருட் டொடர்புடைய உள்ளுறை உவமத்தினின்றும் இறைச்சியை வேறுபடுத்திக் கூறவந்தது போலக்கொண்டு, இதற்குப் பொருந்தாப் பொருள் கூறுவாராயினர். அது சூத்திரச் சொற்போக்குக்கும் நூல் நோக்குக்கும் ஒவ்வாது. “முன்னைச் சூத்திரத்திற் கூறியாங்கு, ஒரு கூற்றில் அதன் சொற்பொருளின் வேறாய் இறைச்சி எனும்