தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 389 |
உள்ளுறை அதாவது மறைபொருள் தோன்றுவதும் தவிர, அவ்விறைச்சி அல்லது மறைபொருளினின்றும் நுணுகி ஆராயும் திறனுடையார்க்குப் புலனாகும் மற்றொரு மறைபொருட்குறிப்புத் தோன்றுவதும் உண்டு” என்பதே இச்சூத்திரத்திற்குரிய நேரிய பொருளாகும். இதற்கு இளம்பூரணர் தரும் உரையும் இக்கருத்தையே வலியுறுத்தும். “இறைச்சிப்பொருள் வயிற்றோன்றும் (பிறிதுமோர்) பொருளும் உள, பொருட்டிறத்தியலும் பக்கத் தாராய்வார்க்கு” என்பது இதற்கு அவர் கூறும் உரையாகும். எனவே (1) ஒரு கூற்றின் சொற்பொருளின் வேறாய், அதன் புறத்தே குறிப்பிற் றோன்றும் பிறிதொரு பொருளே உடனுறை அல்லது இறைச்சி என்பதும், (2) அவ்விறைச்சியினின்றும் உய்த்துணர்வோர் அறியக் கிடக்கும் உட்கருத்து இன்னும் வேறாவதுமுண்டு என்பதும், முறையே இவ்விரு பொருளியற் சூத்திரங்களானும் விளக்கப்படும் பொருள்களாகும். “அம்ம வாழி தோழி! இன்றவர் வாரா ராயினோ நன்றே, சாரற் சிறுதிணை விளைந்து வியன்க ணிரும்புனத்து இரவரி வாரிற் றொண்டகச் சிறுபறை பானாள் யாமத்தும் கறங்கும் யாமங் காவல ரவியா மாறே” (குறுந். 375) இதில், இரவுக்குறிபெற்று வரையாது வந்தொழுகும் தலைவன் சிறைப்புறத்தானாக, அவன் கேட்கத் தலைவிக்குக் கூறுவாள் போலத் தோழி, ‘யாமங் காவலர் உறங்காவாறு தினைக்கதிர் அரிவோரின் பறை யாமத்தும் கறங்குதலால் இன்றிரவுவருதல் நன்றன்றெ’ன அவனுக்கறிவுறுத்துவது, இச்செய்யுட் கூற்றின் சொற்பொருளாகும். இனி, “சிறுதினை விளைந்து முதிர்ந்ததால் அதனை அரியப் பகல் போதாமல் இரவுமரிவாரின் பறை யாமத்தும் கறங்க, அதனால் காவலர் அவியார் (அதாவது உறங்கார்); அதனால் பகலுமவன் வருதல் ஒல்லாது; இனித் தினையரிந்து முடிந்ததும் தலைவி புனங்காவலொழிந்து இற்செறிக்கப் படுவாளாகவே இனி அவன் இராப்பகலிரு போதும் வாரற்க, ” எனும் குறிப்பு இக்கூற்றின் சொற்புறத்தே தோன்றும் இறைச்சியாகும். இனி, அதன்மேலும் இதில், “இவ்வாறு களவொழுக்கம் தடைப்படும்; இனி நீ இவணலம் நுகர விரும்புவையேல் தாழாது |