390 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
விரைந்து வரைந்தெய்துக” என வரைவுகடாவுங் குறிப்பு, இக்கூற்றின் இறைச்சியில் உய்த்துணரத் தோன்றும் பிறிதொரு பொருளாம் உட்கருத்தாகும். III. [i] [3] இறைச்சி உள்ளுறை உவமம், இவற்றுள் வேறுபாடுகளாவன: [1] கடவுள் ஒழிந்த கருப்பொருளொன்றைக் களனாகக் கொண்டு, அக் கருப்பொருட் செய்தியையே ஒப்பாக்கிக் கருதிய பொருளை அவ்வாறன்றிக் குறிப்பாலுணர்த்துவது உள்ளுறை உவமம்; அவ்வாறன்றிக் கருப்பொருட் சார்பே வேண்டாமல், சொற்களின் செம்பொருளின் புறத்தே ஒரு கூற்றில் புலனன்குணரும் புலவர்க்குக் குறிப்பாற்றோன்ற, செய்யுளில்புலவன் கருதியமைக்கும் மறைபொருளே இறைச்சியாகும். உள்ளுறை யுவமம் கருப்பொருள்பற்றியன்றி வாராது; இறைச்சிக்கது வேண்டா. [2] கருப்பொருட் சார்பு வேண்டாதாகவே, இறைச்சிக்கு எவ்வகை ஒப்பு அல்லது உவமக் குறிப்பும் இன்றாகும். இது இவற்றிடையுள்ள மற்றொரு வேற்றுமை. [3] இன்னும் ஒரு வேறுபாடும் இவற்றிடைக் காணலாம். உள்ளுறை உவமம், கூறிய கருப்பொருட் செய்தியையே ஒப்பு அல்லது உவமையாகக்கொண்டு, தானதன் உட்பொருளாக (உபமேயமாகக்) குறிப்பிற் புலப்படுவ தாகலான், உள்ளுறை உவமம் கருப்பொருட் செய்தி கூறும் “சொல்லொடு முடிவு கொளியற்கைப் புல்லிய” கிளவியாகும். இறைச்சியோ, கருப்பொருட் சார்பும் ஒப்பும் வேண்டாது, ஒரு கூற்றின் சொற் பொருளின் வேறாய் அதன் புறந்தே குறிப்பிற்றோன்றுமாதலின், அது “குறிப்பொடு முடிவு கொளியற்கை புல்லிய” கிளவியாகும் (கிளவி எனினும், கூற்றெனினும் ஒக்கும். ) “வார்கோட்டு வயத்தகர் வாராது மாறினும் கருமயிர்ப் புருவை ஆசையின் அல்கும் மாஅல் அருவித் தண்பெருஞ் சிலம்ப! நீயிவண் வரூஉங் காலை மேவரு மாதோ இவணலனே தெய்யோ. ” (ஐங். 238) |