தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 391 |
இச், செய்யுளில், முதன் மூன்றடியும் உள்ளுறை உவமம்; பின்னிரண்டும் இறைச்சி. முதன் மூன்றடிகளில், நீண்ட கொம்புடைய வீறுகொள் பொருதகரான யாட்டுக்கடா தன்னை விரும்பி வாராமல் வேறுபட்டாலும், மென்மயிர்ப் பெட்டையாடு ‘கடாவரும்’ என்னும் நசையால் தங்கும் கருநீரருவி குளிர்விக்கும் ‘பெருமலை யுடையோனே!’ எனக் கூறப்பட்டது. அதனால், “தலைவன் தலைவிபால் வாராமல் தவறிழைக்கும் தறுகண்மையன் ஆயினன்; எனினும் தன் மலையருவிபோல் தட்பமுடையனாகலின், தலைவி அவன் இன்னும் தன்னைத் தலையளிக்க வருவனென நம்பி உயிர்வாழா நின்றாள்” எனக் குறிப்பாற்றோன்றும் உள்ளுறை உவமம் இச்செய்யுட் கூற்றினுள்ளடங்கியதாய், அக்கூற்றின் செய்தியோடொத்துப் பொருள் முடிவதாயிற்று, எனவே, இஃது உள்ளுறை உவமமாதல் காண்க. இதன் பின்னிரண்டடியில், தலைவன் வரையா தொழுகும் வன்கண்மையைச் சுட்டி, விரைவில் தலைவியை அவன் வரையுமாறு தூண்ட விரும்பும் தோழி, “நீ வருங்கால் தலைவி உன்னைக் காணும் மகிழ்ச்சியினால், பிரிவாலிழந்த அவள் பொலிவு உன்னுடன் வரும்” எனக் கூறி, “உன்பொருட்டே உயிர் வாழும் தலைவிபால் வந்துநீ காணுவது அவள் பொலிவென்றே; நீ வாராமையால் இவள் நலனழிந்து மெலிவது நீ அறியாய்; அவள் நலன் அழியாமற் பேண விரும்புவையேல், விரைவில் இவளை வரைவாயாக” எனக் குறிக்கின்றாள். இக்கருத்து அத்தோழி கூறிய சொற்பொருளின் வேறாய், ஒப்பொன்றுமின்றிக் குறிப்பாகத் தோன்றுதலால், இஃது இறைச்சியாயிற்று. இதில் கருப்பொருட் சார்பும் ஒப்புமின்மை கண்கூடு. III. [i] [4] இவ்வாறு தம்முட் பல வேறுபாடுடைய வேனும், இவற்றிடையுள்ள சில ஒற்றுமைகளும் கருதற்குரியவாம். அவையாவன : - [1] இவ்விரண்டும் உள்ளுறை வகைகளாதல் ஒன்று. [2] இன்னும், இவை இரண்டும் அகவகைக்கே பெருவழக்காய் வழங்கிவரும் சிறந்த செய்யுளுறுப்புக்களாதல் மற்றொன்று. |