தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை [ குறிப்பு : நாவலர் ச. சோமசுந்தரபாரதியார், தொல்காப்பியத்தின்கண் உள்ள பொருளதிகாரத்தில் அகத்திணை, புறத்திணை, மெய்ப்பாடு இம்மூன்று இயல்கட்கும் முறையான உரை தந்துள்ளார். இவை நூல் வடிவில் வெளிவந்துள்ளன. இனிப் பொருளதிகாரத்தில் உள்ள களவியல், கற்பியல், செய்யுள்இயல்கட்கும் உரை எழுதத் தொடங்கினார். ஆனால் அவை முழுவடிவம் பெறவில்லை! ஆங்கொன்றும் ஈங்கொன்றுமாக நமக்குக் கிடைத்த சில நூற்பாக்களின் உரை விளக்கங்கள் இங்கே தரப்படுகின்றன. ப. ஆ. ] களவியல் அகப்புறத் திணைகளின் பருப் பொருளை மேல் இப்படல முதல் ஈரியல்களில் தொகுத்துக்கூறிப், பின் அகவொழுக்க நுண் பொருள்களான அன்பி னைந்திணைகளை இவ்வியலில் வகுத்து, அவற்றின் துறை முதலிய உறுப்புக்களைத் தொல்காப்பியர் விரிக்கின்றார். அவைகளை முறையே களவு-கற்பு என்றிரு கைகோள்களாக வகுத்து, அவற்றின் நுணுக்கங்களை அவ்வப் பெயரா னீரியல்களில் விளக்குகிறார். தலைமக்கள் தாமே தமியராய் முதலில் எதிர்ப்படும் காட்சிமுதல், நாளும் வளருமவர் காதல் பிறரறிய வெளிப்படும் வரை, காதலரதனை மறைத்தொழுகலால், அவர்தம் கரந்த காதல் ஒழுக்கம் களவெனப்படும். காதல் வெளிப்பாடு கற்பென வழங்கும். பிறரறியாமல் இருபாலார் மறைத்தொழுகும் காதல். ‘மறை’ |