பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை403

புலவு நாறுதும், செலநின் றீமோ,
பெருநீர் விளையுள்எம் சிறுநல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ?அன்றே. . . . ”

(நற். 45 : 1-5, 8-10)

எனவரும் நற்றிணைப்பாட்டில், தலைவனுயர்வு களவுக் காதலில் கடியப்படாமை காண்க.

“அன்னை அறியினுமறிக” எனத் தொடங்கும் போந்தைப் பசலையார் அகப்பாட்டும், தலைவி நுளைச்சியாகத் தலைவன் நெடுந்தேர் ஊரனாகக் காதலாற் கலந்தவர் களவொழுக்கம் குறிப்பதறிக. இதில், அவர் தவறிழையாமல் உளம்புணர்ந்தொழுகும் களவறக் காதல் தெளிவுறவிளங்கும் செவ்வி உவக்கத்தக்கது.

“அன்னை அறியினும் அறிக அலர்வாய்
 அம்மென் சேரி கேட்பினுங் கேட்க.
 பிறிதொன் றின்மை அறியக் கூறி,
 கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக்
 கடுஞ்சூள் தருகுவென் நினக்கே . . . . ”

(அகநா. 110 : 1-5)

எனத் தோழி, தன் தலைவியின் கற்பறக்காதலைப் பொற்புற எடுத்துச் செவிலிக்குரைத்து அறத்தொடுநிற்கும் அழகறிந்துவப்பாம். இன்னும், “பொன்னடர்ந்தன்ன” (அகம். 280) என்னும் அம்மூவனார் பாட்டிலும், பரதவன் மகளும் மருத ஊரனும் உளம்புணர்ந்தொழுகும் களவுக்காதல் விளக்கமாகும்.

“கழைகோடி வில்லியைச் செற்றார் தியாகர் மலைவெற்பில்
 உழைகோடி சுற்றும் கிரிஎமதூர், உமதூர் மருதம்.
 தழைகோடி கொண்டு சமைத்த தெம்மாடை தனித்தனியே
 இழைகோடி பொன்பெறுமே உமகாடை இறையவரே. ”

எனவரும் எல்லப்பநாவலர் திருவாரூர்க் கோவைக் கலித்துறையும், மருதப்பெருங்குடி நிதிக்கிழவன் தலைவனாகக் குறவர் குறுமகள் தலைவியாகக் களவுக்காதலில் உளம் புணர்ந்தொழுகலும், தலைவனுயர்வு தழுவப்படுதலும் தோழி கூற்றாய்ச் சொல்லக் காண்பாம்.