404 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
சூத்திரம் : 3 | | | சிறந்துழி ஐயம் சிறந்த தென்ப; இழிந்துழி இழிபே சுட்ட லான. |
கருத்து : மேலே களவும் காட்சியும் தெளிய விளக்கி, இதில் ஐயம் கூறுவர் தொல்காப்பியர். பொருள் : சிறந்துழி, ஐயம் சிறந்தது என்ப = முன்னறியார் முதலெதிர்வில் காதலிப்பார், ஒருவரை மற்றவர் யார் இவரென்று ஐயுறுங்கால், அவ் ஐயம், உயர்வோடு உறழ்தல் பெருமைதரும் என்பர் களவியல் நூலார்; இழிந்துழி இழிபே சுட்டலான = ஐயம் இழிவு தழுவி எழுமிடத்து, ஐயுறுவார் உள்ளத்து (இகழ்ச்சி) இழி வுணர்ச்சி குறிக்கும் அன்றி, காதல் வளர்க்காது. குறிப்பு : காட்சியிற் காதலர் முன்னறியாமையால் “ஆவயினெதிர்ந்தவர் யாவர்கொல்” என்று இருவர்க்கும் ஐயம் எழுவதே இயல்பு. ஆனால், ஐயம் மேன்மைவழி நிகழ்தல் பெருமை; தாழ்வின் வழிப்படுமேல் காதலைத் தகையு மிழிதகவாம். காணப்பட்டாள் “அறமகளோ? ஆரணங்கோ? திருமகளோ? மடமயிலோ?” எனத் தலைவனும், எதிர்ந்தவனைச் “செவ்வேளோ? காமனோ? இயக்கரின் பெருமகனோ?” எனத் தலைவியும் எண்ணுதல் இருவருக்கும் பெருமை தரும். “உருவுமாறும் அரக்கியோ? அணிபுனைந்த அலகையோ? மோகினிபோல்வந்த மூத்தவளோ?” எனத் தலைவியைத் தலைவனும்; “புளிஞனோ? அரக்கனோ? புலைமகனோ?” எனத் தலைவனைத் தலைவியும் எண்ண நேரில், ஒருவரையொருவரிகழ்ந்து வெறுப்பதல்லால், வியக்கவும் நயக்கவும் இயலாமை தேற்றம். அதனால், “மேலோரொடு வைத்தையுறலே சிறந்தது. இழிந்தோரா யெண்ணுதல் இழுக்காகும்” என்பதே இச் சூத்திரச் செம்பொருளாகும். இனி, சூத்திரச் சொற்றொடருக்கேற்ற செம்பொருளிதுவாகவும், பழைய உரைகாரர் இருவரும், ‘சிறந்துழி’ என்பதற்கு, இருபாலவருள், சிறந்த ஆண்மகனுக்கே ஐயம்தகும் என்றும், அறிவிற் குறைந்த பெண்மக்கள் ஐயந்தீர்க்கும் கல்வியறிவில்லாமையால் அவர்பால் ஐயமே கூடாதென்றும் பொருள் கூறினர். அவருரை, பெண்களை இழிக்கும் வடநூல் வழக்கைத் தழுவி எழுதிய பிழையென மறுக்க அன்றியும், |