பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை451

அவசியமான ஈற்றடிசுட்டுஞ் சொல் வேறின்மையால், இவர் பொருளுக்குச் சூத்திரம் இடந்தராமை வெளிப்படை.

இதில் ‘குட்டத்தை’யே உரையாசிரியர் கூறியபடித் தரவெனக் கொள்ளின் ‘குட்டம்’ எனும் பெயரெழுவாய்க்குப் பயனிலையடையாய் நிற்கும் ‘எருத்தடி’ என்பது ‘ஈற்றயலடி’ எனும் பொருள் தருவது இனிது விளங்குவதாம். இதனால், மேற்சூத்திரத்தில் நேரடிகொள்ளுமென்ற தரவின் ஈற்றயலடி ஒரோவழிச் சீர்குறைந்த அடியுமேற்கு மென்பதைத் தெரிவிக்கவே இச்சூத்திரம் எழுந்ததாகும். இப்படி ஈற்றயலடி குறைந்துவருதல் சிறுவரவிற்றென்று சுட்டற்கே, ‘உடைத்துமாகும்’ என இதில் ஆசிரியர் உம்மை கூட்டியுரைத்துள்ளார்.

பேராசிரியர் ‘குட்டம் எருத்தடியின்கண்ணும் வரும்’ என்று இதற்குப் பொருள்கூறி, “குட்டம் இடைவருவதன்றி ஒருபாட்டின் ஈற்றயலடிக்கண்ணே வந்தொழிதலும் உண்டு” எனச் சிறப்புரையானும் அப்பொருளை வலியுறுத்தினார். எருத்தடியை ‘ஈற்றயலடி’ என்றிவர் கொண்டது பொருந்தும். குட்டம் குறைந்த வடியென்றால் இவர் கருத்தின்படி முந்திய சூத்திரத்தானே இவ்விலக்கண மடங்குமே. மீட்டொரு சூத்திரமிங்கு வேண்டா. நாற்சீரடிப்பாக்களில் எங்கும் குறைந்தவடி வருமென்று அதற்கிவர் பொருள் கூறினதாலேயே ஈற்றயலில் குட்டம் வரலாமென்பது போதருமே.

இனி, இவர் கருத்தின்படி இச்சூத்திரமே பொதுவாக எப்பாவினும் ஈற்றயலடி குட்டமாக (குறைந்ததாக) வரும் என விதிப்பதாகும். ‘ஈற்றயலடியே ஆசிரிய மருங்கிற்றாற்ற முச்சீர்த்தாகுமென்ப’ (செய். சூ. 68) என்று முன் தெளிவாகக் கூறிவிட்டாராகையால் இங்கு அவ்வாசிரியமல்லாத வேறு இன்னபாவினீற்றயலினும் குறைந்த குட்டம் வருமென விளக்காமல் வாளா கூறினாராசிரியர், ஆகவே அவ்வாறு குற்றப்பட வரும் பொருளை இச்சூத்திரத்திற்குரியதாக ஆசிரியர் கருதியிராரென்பது ஒருதலை.

சூத்திரம் : 117 
 மண்டிலம் குட்டம் என்றிவை யிரண்டும்
செந்தூக் கியல வென்மனார் புலவர்.