பக்கம் எண் :

454நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

இணைக்குறள் நேரிசை ஆசிரியப்பாவகைகளையே குறிப்பதாயின் “மண்டிலத்தின்கண் குட்டம் வருங்கால்” என்று முன் சூத்திரத்தின் கீழ்ப் பேராசிரியர் கூறியது பொருந்தாக் கூற்றாகிமுடியும். மண்டில ஆசிரியப்பாக்களில், குட்டம் வருமாறில்லை. குட்டமாவன, மண்டிலப் பாவாகா, எனைத்து வகையானும் இவர்தம் கூற்றுக்கள் இடர்ப்பட்டழியும்.

இனி, முன் சூத்திரத்தில், “நாற் சீரடியான் மண்டலித்து வரும் ஆசிரியமும் வெண்பாவும் மண்டிலத்துளடங்குமென” விளக்கிய நச்சினார்க்கினியர், அதை மறந்தோ அல்லது அதற்கு மாறாகவோ, இச்சூத்திரவுரையில், அவ்விருபாக்களையு மடக்கிய மண்டிலம் அவற்றுளொன்றேயான “ஆசிரியப்பாவின்கண் பயில நடக்கும் தன்மையை யுடைய” எனக் கூறுவதும் வியப்பையே விளைப்பதாகும். இவை பலவற்றானும் இச்சூத்திரத்திற்கு இவ்விருவர் தரும் உரையும் தக்கதன்று எனத் தெளியலாகும்.

இனி இதற்கு இளம்பூரணர் கூறும் உரையாவது: “மண்டிலமாகக் கூறப்படும் பாவும் குட்டமெனக் கூறப்படும் பாவும் அகவலோசையியல்பின”. இவர் மண்டிலத்தை ஆசிரியமெனவும், குட்டத்தைத் தரவெனவும் முன் சூத்திரத்திற் கூறினதால், அப்பொருளே இங்குங் கருதினரென்பதே பொருத்தமாகும். அவ்வாறு கொள்ளுவதில் மற்றை யுரைகாரருக்குக்காட்டிய தடைமுரண்களில் சில இவ்வுரையமைவின்மையை வலியுறுத்தும். ஆகையால், இதில் ‘மண்டிலத்தை’ அடிமண்டிலித்துவரும் அராகமாகவும், ‘குட்டத்’தை யிவர் கூறியவாறே தரவெனவுங் கொள்ளுவதே இச்சூத்திரத்திற்கு அல்லலற்ற நல்ல பொருளமைவு அளிப்பதாகும்.

முன் 115ஆவது சூத்திரத்தால் தாழிசை, அராகம், தரவு எனும் மூன்று கலியுறுப்புக்களும் அளவடிபயின்று வருமென விளக்கி, அதையடுத்து 116ஆவது சூத்திரத்தில், அம்மூன்றனுளொன்றான தரவு பெரும்பாலும் நேரடி பெறுவதியல்பாயினும், ஒரோவழி அதன் ஈற்றயலடி குறைந்து வருவதுமுண்டு எனத் தெரித்து இச்சூத்திரத்தால் அத்தரவொழிய, தாழிசை, அராகமெனுங் கலியுறுப்பிரண்டும் செந்தூக்கியல் பெற்று நடக்கும் என்று ஆசிரியர் விளக்கினார் எனக் கொள்வதே இம்மூன்று சூத்திரங்களுக்கும் ஒத்து முரணற்று ஏற்புடைய பொருட்பொருத்தம் தருவதாகும். எனவே, “அராகம், தரவு என்ற