458 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
பிறிதொரு சொல்லை அவாவி நிற்பது தேற்றம். இவையேயும் அன்றிப், “பாநிலை வகையே கொச்சகக்கலியென நூனவில்புலவர் நுவன்றறைந்தனரே” என்பது தனிச்சூத்திரமெனின், பொருளின்றி நின்றுவற்றும். “கொச்சகக் கலியாவதுபாநிலை வகையே” என்பதால் தெளியப்படுவது எதுவுமில்லை. பிற பாவகைகள் ஒவ்வொன்றற்கும் தனித்தனியே இலக்கணம் கூறி விளக்கின ஆசிரியர் ஈண்டுக் கொச்சகக்கலி வகைக்கு மட்டும் இலக்கணம் கூறாமைக்குக் காரணம் காண்டல் அரிது. இதில் இலக்கணம் எதுவுமின்றி வாளா கொச்சகக் கலியெனப்பெயரும், முன்னதிற் பெயரொன்றுமின்றி வாளா இலக்கணமுங் கூறினரெனக் கொண்டு, ஆசிரியர் முன்னதிற் கூறாப்பெயர் ‘வெண்கலிப்பா’ எனவும், பின்னதிற் கொச்சகக்கலிக்குக் கூறா இலக்கணம் ‘பாவின் நிலைவகை’ எனவும் உரைகாரர்கள் கூறுவதில் பெறத்தகும் ஊதியம் என்னை?மேலும் ‘பாநிலைவகை’ எனுந் தொடர் எப்பாவின் எந்நிலை என்பதை விசதமாக்காமல் நிற்பதும் தெளிவே. ஆகவே, ‘தோன்றும்’ எனுஞ்சொல்லும், ‘பாநிலைவகை’ எனுஞ் சொற்றொடரும் முடிவின்றித் தனித் தனி நின்று பொருள் குன்றுவதினும், அவை ஒன்றையொன்று ஒன்றித் தழுவக் கண்டு, ஈண்டுச் சூத்திரம் இரண்டன்றி ஒன்றேயாக எல்லா அடிகளையும் இணைத்து நோக்கின், போருந்திய பொருளும் திருந்திய இலக்கணமும் மாணச்சிறந்து காணப்படும். இவற்றைத் தொடுத்துப் படிப்புழி முன்னதிற் கூறும் இலக்கணம் அமைந்து தோன்றும் பாநிலை வகையே கொச்சகக் கலியாம் என்பது இனிது பெறப்படும். எனவே, இதற்கு முற்கூறிய கலிவெண்பாட்டிலக்கணச் சூத்திரமும், இக்கொச்சகக் கலி யிலக்கணச் சூத்திரமும், இதன்பின் உறழ்கலியிலக்கணச் சூத்திரமுமாக நிரலே நின்று, ஆசிரியர் முதலில் ஒத்தாழிசைக் கலிமுதல் தொகுத்துக்கூறிய கலிவகை நான்கும் மலைவின்றி முடிந்து அடைவே இலக்கணம் அடையக் காண்கிறோம். ஆகையால் இங்கு இஃது இவ்வாறு ஒரு சூத்திரமாய் நிற்பது கொண்டு, “தரவும் போக்கும் இடையிடை மிடைந்தும், ஐஞ்சீரடுக்கியும் அறுசீர்பெற்றும் வெண்பா இயலான் வெளிப்படத் தோன்றும் பாநிலை வகையே கொச்சகக்கலியென நூலறிபுலவர் விளக்கித் தெளித்தார்” என்ற செம்பொருள் கண்டு, மருளகற்றித் தெருளவைப்பதே இயலியைபும் இலக்கணப் பயனொடு பொருணயமும் ஒருங்கு தருவதாகும். தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை களவியல், கற்பியல், செய்யுளியல்கள் முற்றும் தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை (1) உரிமையுரைகள் (2) ‘புத்துரை’ச் சிறப்புக் கட்டுரைகள் (3) ‘நூற்பா’ முதற்குறிப்பு அகராதி முதலியன |