பக்கம் எண் :

464 

[குறிப்பு : 1964ஆம் ஆண்டு, இந்நூலின் 2ஆம் பதிப்பு வெளியிட்டபோது எழுதப்பெற்ற கட்டுரை இது. ]

அகத்திணையியற் புத்துரை
அறிமுகம்

வித்துவான் திரு. வீ. ப. கா. சுந்தரம், எம். ஏ. ,

தமிழ் விரிவுரையாளர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை.

நாவலர், கணக்காயர், நற்பெரும் ஆய்வாளர், பசுமலை ச. சோமசுந்தர பாரதியார் ஆற்றிய பல்வேறு தமிழ்த் தொண்டுத் துறைகளுள் தலையாயது, தொல்காப்பியப் பொருட்படலத்திற்கு அவர் கண்ட புத்துரையாகும். மங்கிக்கிடந்த தொல்காப்பியம் அவர் ஆய்வுரையாலும் சொற்பொழிவுகளாலும் ஒரு புது மங்கல வாழ்வு பெற்றது; வளர்ந்தோங்கத் தொடங்கியது; அறிஞர் பெருமக்களைச் சிந்திக்கத் தூண்டியது; மேலும் பல உரைகள் தோன்றத் துணைபுரிந்தது.

(அ)  நச்சினார்க்கினியர், இளம்பூரணர் முதலிய இடைக்கால உரையாசிரியர்கள், சூத்திரங்கள் தோறும் தம்முள் பெரிதும் மாறுபட்டு, முரண்பட்டு வெவ்வேறு பொருள் கூறிக் கற்போரை மயங்க வைக்கின்றனர். நாவலர் அவ்வுரையாசிரியர் கூற்றுக்களுள் இவை இவையே ஒவ்வியன, இவை இவையே ஒவ்வாதன என ஏற்ற காரணங்களாலும் எடுத்துக்காட்டுக்களாலும் தெளிவுறுத்தியுள்ளார்.

(ஆ) உரையாசிரியன்மார், வடநூன் முடிபுகளை வலிந்து புகுத்தித், தமிழர்தம் அறநெறி மாண்புச் சிறப்பைத் தாழ்த்தியுள்ள இடங்களில் எல்லாம் அஞ்சாது கண்டித்துரைத்துத், தமிழுக்கு இயற்கையாக உரிய அற எழிலை இலங்கச் செய்கின்றார்.

(இ)  தொல்காப்பியம், வடநூல் வழியே அமைந்தது அன்று; தமிழ் மரபு தழுவியது என்று, ஆங்காங்குக் காரணங்காட்டி நிறுவுகின்றார்.