பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை465

(ஈ)   தொல்காப்பியர் நூலானது முன்பின் முரணாத அழகிய அமைப்பு முறையுடையது; ஆழம் நிறைந்தது; தெளிவு செறிந்தது; வளர் எழில் வளப்பம் வாய்ந்தது என எங்கும் எழிலுற எடுத்து விளக்கிச் செல்கின்றார். நன்னூல், நம்பியகப் பொருள், புறப்பொருள் வெண்பா மாலை முதலிய வழிநூல்களைக் காட்டிலும் சிறப்பமைப்பும் அவைபோலப் பிழைபடாப் பெரும் வனப்பும் உடையது தொல்காப்பியம் என நிறுவுகின்றார்.

(உ)  நூற்பாக்களை விளக்குங்கால், மரபாக, இலக்கண ஆசிரியர்கள் கூறிவரும் பழைய எடுத்துக்காட்டுக்களையே மீண்டுங் கூறாது, புத்தம் புதிய, ஏற்ற, இனிய பல்வேறு எடுத்துக்காட்டுக்கள் தந்துள்ளதனின்றும், பாரதியாரின் சங்க இலக்கியப் பயிற்சியும் ஆழ்ந்தகன்ற அறிவுத் திறனும் அறியலாகும்.

(ஊ)  நாவலரவர்கள், சூத்திரந்தோறும் நம் சிந்தனையைத் தூண்டிப் பல புதிய செவ்விய செய்திகளைச் சொல்லிச் செல்கின்றார். அவற்றை முழுமையும் தனித்தனி விரிக்கிற் பெருகும். எனவே, சீரிய செய்திகளுள் சிலவற்றை மட்டும் இங்குச் செப்புகின்றேன். இவை நூலை முறையே கற்பதற்குத் தூண்டுதலாக உதவலாம் என எண்ணுகின்றேன்.

1.    திணைப் பெயர்களின் பொருள்

குறிஞ்சி, நெய்தல் முதலிய திணைச் சொற்கள், முறையே புணர்தல், இரங்கல் முதலிய பொருளைக் குறிப்பன. எனவே அகத்திணைச் சொற்களெல்லாம் ஒழுக்கத்திற்குரிய இயற்பெயர்ச் சொற்கள். புணர்தல் ஒழுக்கத்திற்குரிய குறிஞ்சி எனும் சொல்லானது, பின்னர் ஆகுபெயர் நிலையில், குறிஞ்சி நிலத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. குறிஞ்சி எனும் சொல்லின் முதற்பொருள் ‘புணர்தல்’ என்பதாகும். வழிப் பொருள் குறிஞ்சி நிலமாகும். இது போன்றே பிறதிணைப் பெயர்கட்கும் கொள்க. குறிஞ்சி முதலிய பெயர்கள் நிலங்களுக்கே உரிய பெயர்கள் என்றது பிற்காலத்தார் பிழைபட்டுப் பிறழ்ந்து உணர்ந்து உரைத்ததாகும்.

2.    நிலங்கட்கு ஏற்பத் திணை வகுக்கப்படவில்லை

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று நானிலங்களை வகுத்து, அவற்றிற்கு ஏற்ற ஒழுக்கங்களை வகுத்தனர் என்பது