466 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
உரையாசிரியர் சிலர் கொண்ட கொள்கை. இது பிழைபட்ட பிற்காலக் கொள்கை என நாவலர் தெளிவுறுத்தியுள்ளார். திணையே (ஒழுக்கமே) உரிப் பொருளாகும். அகப்பாட்டுக்களில் அதுவே தலையாயதுமாகும். ஆகவே, ஒழுக்கங்கட்குப் பொருந்துமாறு நிலங்கள் பிரிக்கப்பட்டன எனலே, செவ்விய கொள்கையாகும். உரிப்பொருளாகிய ஒழுக்கத்திற்கு, முதற்பொருளும் கருப்பொருளும் துணையாகவும் சார்ந்து வருவனவாகவும் அமைக்கப்பட்டவையேயாகும். ஒழுக்கங் கருதியே, அனைத்தையும் பிரித்தமைத்தல், தமிழ் மரபும் தமிழ் அறவுணர்வும் ஆகும் எனப் பல்வேறு சூத்திரங்களில் நாவலர் நன்கு உணர்த்திச் செல்வதை இன்று நடுநிலை நெஞ்சங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. 3. தமிழர்தம் கடவுளர்கள் மாயோன், இந்திரன், வருணன் முதலிய கடவுளர்கள், தமிழர்தம் கடவுள்கள். மாயோன் கருநிறக் கடவுள். மாமை கறுப்பு நிறம். ஆரியர்க்கு வழக்கம், கருநிறத்தைப் பழிப்பதேயன்றிப் புகழல் அன்று. ஆனால் தமிழ் நூற்கள் கருநிறத்தைப் புகழும். “இந்திரனும், வருணனும் ஆரியர் வழிபடுங் கடவுளராய்க் கருதப் பெறினும், மிக மிகப் பழங்காலத்தே திராவிடர் வழிபட்ட தெய்வங்களாகவும், பின்னர்த், திராவிடரிடம் ஆரியர் வாங்கித் தம் வழிபடு கடவுளாக்கிக் கொண்டனர் எனவும் சில மேனாட்டுப் புலவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளாலும் அறிகின்றோம்” என்றுரைத்துள்ளனர். இவர் கூறியதை மேலும் ஆராய, வருணன் என்ற சொல், தமிழ்ச்சொல் எனப் புலப்படுகின்றது. வண்ணன், வண்ணான், வண்ணத்துப்பூச்சி, வண்ணக்கன் (நற். 257), வண்ணப்புறக் கந்தரத்தனார் (அகம். 49) முதலியன தனித் தமிழ்ச் சொற்கள், திருணை திண்ணை; உருண்டை உண்டை. இச் சொற்களில் ‘ரு’ நீங்குவது போன்று, வருணன் என்பதில் ‘ரு’ நீங்குவது இயல்பே. இந்திரன் என்ற சொல்லமைப்பையும் ஆராய, அதுவும் தமிழ் எனப் புலப்படுகிறது. இந்திரன் என்ற சொல்லுக்குப் பொருந்தாத முரண்பட்ட பல்வேறு வேர்ச் சொற்பொருள் ஆரிய மொழியில் கூறப்பட்டுள்ளதே, அது ஆரியச் சொல் இல்லை எனக் காட்டுவதாகும். இந்து - சிந்து. சிந்து - சிதறிவிழு. துளிகளாக விழு. மழை, துளிகளாகச் சிதறிவிழுவது. இந்திரன் - மழைக் கடவுள். எனவே, சொற்பொருள் வழி நோக்கினும் நாவலர் கொள்கை வலியுறுவதை நன்குணர்க. |