தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 467 |
4. சிறுபொழுது ஐந்தல்ல; ஆறே! நாற்கவிராச நம்பியாரும், சிவஞான முனிவரும் பிறரும் சிறுபொழுது ஐந்து எனக் கூறியுள்ளனர். அவர்கள் காட்டும் ஐம்பொழுதுகள்: 1. மாலை - இரவின் முதற் காலம் 2. யாமம் - இடை யிரவு 3. வைகறை - இதுவே விடியல் நேரம் 4. எற்படு காலை - சூரியன் எழுங் காலை 5. நண்பகல் - உச்சிப் பொழுது “மாலை யாமம் வைகறை எற்படு காலை வெங்கதிர் காயுநண் பகலெனக் கைவகைச் சிறுபொழுது ஐவகைத் தாகும்” 12. அகப்பொருள் விளக்கம் இச்சூத்திரத்தைப் பின்பற்றியே சிவஞான முனிவர் சிறுபொழுது ஐந்தே என நிலைநாட்டப் பல்வேறு காரணங்காட்டியுள்ளார். முனிவர் கூறிய முக்கிய காரணங்களையும் நாவலர் விடுத்த நன்மறுப்புக்களையும் முறையே காண்போம். சிவஞா : 1. முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணைகளை இம்முறைப்படுத்தியதற்குக் காரணம் - மாலை, யாமம், வைகறை, காலை, நண்பகல் என்னும் சிறுபொழுதின் கிடக்கை முறையே யன்றி, வேறு ஒரு காரணமும் இல்லை. ஆகையால் சிறுபொழுது ஐந்தே. நாவலர்: 1. ஐந்திணை முறை வைப்பிற்குச் சிறு பொழுதின் கிடக்கை முறையே காரணம் என்றது முனிவர் தாமாகவே படைத்துக்கொண்ட கற்பனைக்காரணமேயாகும். இவர் கூற்றிற்கு இவரே ஆதரவாவர் தவிரத் தொல்காப்பியத்துள் ஆதரவில்லை. மேலும், மருதத்திற்குச் சிறுபொழுது இரண்டு. மேலும் பெரும் பொழுதுகளையும் ஐந்திணைகளையும் இணைக்கவில்லை. சிவஞா: 2. “வைகறையும் விடியலும் இரண்டு தனித்தனிப் பொழுதுகள் அல்ல; இரண்டும் ஒரே பொழுதுதான்” என்றார். |