468 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
நாவலர்: 2. வைகறை என்பது சூரியன் எழுதற்கு முன்னான இரவின் இறுதிநேரம். விடியல் என்பது சூரியன் புலருங்காலம். இவை இரண்டும் இரு தனிப்பொழுதுகள் என்பதைப் பண்டைத் தொகை நூற்களால் அறியலாகும். “இருள் மாய்ந்து கதிர் விரியும் விடியல்” என மதுரைக் காஞ்சியிலும், “வான்கண் விரிந்த விடியல்” என (257) மலைபடுகடாத்திலும் வைகுபுலர் விடியல், புலரி விடியல், பெரும் புலர் விடியல், தண் புலர் விடியல் எனத் தொகை நூற்களிலும் விளக்கமாய் வருவதால், சூரியன் வான்வெளிக் கிளம்பும் பொழுதே விடியல் என அறிக. “இரவுத்தலை பெயரும் ஏமவைகறை” என (686) மதுரைக் காஞ்சியிலும், “வைகுறு மீனின்இனையத் தோன்றி . . . . வைகறை” என (48) நற்றிணையிலும் வரும் செய்திகளால், வைகறை என்பது இருள் நீங்காத இரவின் இறுதிக் காலம் என்பது அறிக. விடியல் வேறு; வைகறை வேறு. இவை இரண்டும் ஒன்றல்ல. வேர்ச் சொல் பொருளே இவை தனிச் சிறுபொழுதுகள் எனத் தெளிவிக்கும். வைகு + அறை = வைகறை; வைகுதல் - தங்குதல்; தூங்குதல். தங்குதலின் இறுதிக் காலம் வைகறை. விடிதல் - விடுபடுதல். இரவு விடுபட்ட காலம். ஒப்பு : படு - படிபடிதல்; விடு : விடி - விடிதல். 3. இனிச் சிவஞான முனிவரும், நாற்கவிராசநம்பியாரும் ‘எல்படு’ என்பதற்குச் சூரியன் எழுங் காலை எனப் பொருளுரைத்தனர். அதனை நாவலர் மறுத்து உரிய நற்பொருள் விளக்கியுள்ளார்: எல் என்பது சூரியன். எல்படு பொழுதை எற்பாடு என்பதே தமிழ் வழக்கு. நாள் நடைமுறைப் பேச்சில் ‘சாயுங்காலம்’ எனும் தொடரும் இதனை விளக்கும். இன்றும் மலையாள நாட்டில், ஞாயிறு மறைந்து படும் திசையைப் ‘படுஞாயிறு’ என்றே வழங்குவர். சங்கச் செய்யுட்களும் இச்சிறு பொழுதை நன்குவிளக்குகின்றன. பகன் மாய்ந்து இப்படுசுடர் அமையம் என (48) அகநானூற்றாலும், படுசுடரடைந்த பகுவாய் நெடுவரை என (33) நற்றிணையாலும், சூரியன் படும் பகலிறுதிக் காலமே எற்பாடு என்பது தெளிக. 4. மேலும் பகலை மூன்று பொழுதாக்கி, இரவையும் மூன்று பொழுதாக்கிக் கூட்ட, ஒரு நாளாகும். பகல் = 1. காலை. |