470 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
பாலைத்திணையாகக் கருதலாகும்” என்று. இவ்வாறு அமைதிகாட்டல் பொருந்தாது. ஏனெனில், இரவுக் குறியீடு, பகற்குறியீடு, முதலிய பல்வேறு துறைகளிலும், தலைவன், தன் பெற்றோர் முதலியோரைப் பிரிந்து வருகின்றான்; தலைவியும் பிரிந்து வருகின்றாள். அத்துறைகள் பாலையாகா!மேலும் தலைவனோ, தலைவியோ, தன் பெற்றோர் முதலியோரைப் பிரிதலைப் பாலை எனக் கொள்ளுமாறு. தொல்காப்பியர் யாண்டும் தெளிவுறுத்தவில்லை. அவ்வாறாயின், உடன் கொண்டுபோதல் எத்திணையின் பாற்படும்?அது ஒரு நிலத்தைக் கடந்து செல்வதால் புணர்தலுள் அடங்காது; தலைவியைத் தலைவன் உடன் கொண்டு செல்வதால் பாலையாகாது. மேலும், அது, இருத்தல், இரங்கல், ஊடல் திணைகளுமாகாது. எனவே இது ஐந்திணையுள் அடங்காமல், ஒரு நிலத்துத் தனியுரிமை கொள்ளாமல், தனி உரிப்பொருளாய் வருதலுண்டு என்பதைப் பல சூத்திரங்களின் உரையில் நாவலர் விளக்கியுள்ளார். “ஐயா, கலித்தொகையில், உடன்போக்குச் செய்யுட்கள் பாலைக் கலிப் பகுதியினுள் பகுக்கப்பட்டுள்ளதாலும் ‘போக்கெல்லாம் பாலை’ என்ற பழம் வெண்பாவாலும், அதனைப் பாலை எனக் கொள்ளலாகாதோ?” என ஒருநாள் வினவியதற்குக் கணக்காயர் அறிவூட்டிய கருத்து வருமாறு: உரையாசிரியர்களின் தவறான கருத்தை ஒப்புக்கொண்டு, ‘போக்கெல்லாம் பாலை’ எனப் பிற்காலத்தில் பிழைபடப் பாடிவிட்டனர். மேலும், சங்கப் பாடல்களைத் தொகுத்த காலத்துத், தொகுத்த ஆசிரியர்கள் பாடல் துறைகளை வகுத்துக் குறித்தனர்; அவர் குறித்த துறைவழியே பின்னர் உரை எழுதினர். இவை யாவும் பிழையற்றன என ஏற்றற்குரியனவல்ல. புறநானூற்றுக்குப் புறப்பொருள் வெண்பாமாலை கொண்டு துறை வகுத்ததைக் காட்டிலும், தொல்காப்பிய நெறிப்படியே துறை வகுப்பதே சிறப்பாகும். மேலும் கலித் தொகைக்கு உரை எழுதியவரும் துறை சுட்டியவரும் ஒருவரே - நச்சினார்க்கினியரே. இவர் தொல்காப்பியத்திற்குப் பொருந்தாத உரைகளைக் கூறி, அப்பொருந்தா இலக்கண உரைகட்கு ஏற்ப இயையுமாறு கலித்தொகைத் துறைகளையும் தாமே தம் போக்குப்படியே பண்டையாசிரியர் வேறு எவர் கூறினும் உடன்போக்குப் பாலை யாகாது என்று விளக்கினார். |