தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 471 |
6. பிரிந்தவண் இரங்கல் பெருந்திணையா? உடன்கொண்டு போம் காலத்துத் தலைவியின் சுற்றம் வருந்துதலாலோ பிற காரணத்தாலோ, பிரிய நேரின், அங்கு அப்பிரிவு பற்றி இரங்குதல் பெருந்திணைப் பாற்படும் என இளம்பூரணர் இயம்பியுள்ளார். பிரிந்து இரங்கல், ஒத்த காதலரிடையே நடை பெறுவதால், இது பெருந்திணையாகாது. சீரிய காதல் தலைமக்கள் தம்முள் பிரிந்து இரங்குவது, நேரிய நெய்தற் றிணை சார்ந்த உரிப்பொருளாகும். 7. திணை மயக்குறுதல் பற்றித் தவறாய கருத்து நச்சினார்க்கினியர், அகத்திணையியல் 14ஆம் நூற்பாவில், திணை மயக்குறுதல் என்பதை விளக்குங்கால், ஓர் உரிப்பொருளொடு, ஓர் உரிப் பொருள் மயங்குதலையும் கொள்ளல் வேண்டும் என்றுரைத்துள்ளனர். இது தவறு என்பதற்குக் கணக்காயர் பாரதியார் காட்டிய காரணங்கள் வருமாறு : 1. ஓரோழுக்கச் செயல் நிகழும்போது, மற்றோர் ஒழுக்கச்செயல் எவ்வாறு நிகழ இயலும்?குறிஞ்சி நிகழும்போது பாலையும் நிகழுமோ? அவ்வாறு பலவொழுக்கங்கள் தம்முள் மயங்குமென்று தொல்காப்பியர் இயற்கைக்கு முரண்பட்டு யாண்டும் கூறவில்லை. திணைமயக்கம் என்பது யாது?(1) ஒரு நிலத்தில் அந்நிலத்திற்குரித்தல்லாத மற்றோர் ஒழுக்கம் நிகழலாம். காட்டாகக் குறிஞ்சி நிலத்தில் பிரிவு ஒழுக்கம் நிகழலாம். இதனையே, வேறுமுறையில் சொன்னால், ஓரொழுக்கம் அவ்வொழுக்கத்திற் குரியதல்லாத பிறிதொரு நிலத்தில் நிகழலாம்எனச் சொல்லலாம். (2) மேலும் ஒரு நிலத்திற்கும், ஒழுக்கத்திற்குமுரிய கருப்பொருட்கள் பிறிதொரு நிலத்திற்கும் ஒழுக்கத்திற்கும் வரலாம். இவையே திணைமயக்கம் நிகழும் நெறி. 8. பண்டைக் காலத்தில் பிறப்பால் சாதி வகுப்பில்லாமை பிறப்பளவில் உயர்வு தாழ்வுகருதும் வேறுபாடுடைய சாதி வகுப்புக்கள் பண்டு தமிழகத்தில் கிடையா. நானிலங்களிலும் வாழ்ந்து வந்த மக்கள் தமக்குள் திருமணங்கள் புரிந்தனர். அவர்கள் பெயர்களின் அமைப்பு நிலத்தின் அடிப்படையிலோ தாம் செய்த தொழிலின் அடிப்படையிலோ அமைந்தது. நுளைஞர், பரதவர் என்பன - நெய்தல் நிலத்தவர் என்பதைக் காட்டும் பெயர்கள் வலையர் என்பது மீன் பிடிக்கும் தொழிலர் |