472 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
என்பதைக் காட்டும் பெயர். உமணர் என்பவர் உப்பு விற்பவர்; ஆயர் - முல்லை நிலத்தவர்; வேட்டுவர் - வேட்டைத் தொழிலவர். பண்டைத் தமிழகத்துத், திருமணங்கள் பிறப்பில் உயர்வு தாழ்வு கருதாமலும் ஒத்த அன்பே சீரியதாகக் கருதி நடைபெற்றன. மேலும், மரபியலில் காணப்பெறும் ஆரியர் வருணவகை பற்றிய சூத்திரங்கள் இடைச் செருகல் என்பது தெளிக. 9. சிறுதொழில் செய்து வாழ்ந்தோரும் காதல் ஒழுக்கமுடையோரே! நாட்டை ஆள்வோரே, காதல் திண்மையுடையராகும் தகுதியுடையவர் என்றும், சிறுதொழில் செய்து எளிய வாழ்க்கை வாழ்வோர் காதல் தலைமக்கள் ஆதற்குரிய திண்மையுடையரல்லர் என்றும் இடைக்கால உரையாசிரியர்கள் தவறாக எண்ணிப் பல சூத்திரங்கட்கு உரை எழுதிவிட்டனர். இன்றும் தொல்காப்பியத்திற்கு உரை எழுதுவோர் பலரும் அவ்வாறே எழுதித் தொழில்புரியும் மக்கட்குச் சிறப்புத் தர மறுக்கின்றனர். ஆனால், வினைவலரும் அடியாரும், அன்பின் ஐந்திணைத் துறைகளில் தலைவர்கள் ஆதற்குரியரே. அவர்களுள்ளும் பலர் உறுதிப்பாடும் உயர் பண்பாடும் உடையரே. ஆதலால் அவர்களைக் காதல் துறைக் கிளவித் தலைவராகக் கொண்டு செய்யுட் புனைந்துள்ளனர் பண்டைப் புலவர் பலர். ‘உப்புக்கு நெல் தாரீரோ?, ’ எனக் கூவி, ஊர்தோறும் விற்றுவரும் உமண் மகளையும் (அகம் 390), ‘சாரற் சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகளை’யும் (குறுந். 95), ‘வரையகச் சிறுதினைச் செவ்வாய்ப் பாசினம் கடியும் கொடிச்சி‘யும் (நற். 134), “நிணச் சுறாவறுத்த வுணக்கல் வேண்டி, இனப்புள் ஓப்பும்” புலவு நாறும் பரவர் மகளையும் (நற். 45) கிளவித் தலைவியராகப் படைத்துச் சீரிய உயிர்க் காதல் பண்பு நெறி மகளிராகக் காட்டியுள்ளமை அறிக என விளக்கியருளியுள்ளார். இதுபோன்றே வினைவல்லாருள்ளும், அடிமை பூண்டவருள்ளும் குற்றேவல் தொழில் புரிவாருள்ளும் காதற்றலைமைபூண்டார்க்கு எடுத்துக்காட்டுக்கள் நாவலர் தம் நூலுள் தந்துள்ளார். |