பக்கம் எண் :

474நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

காட்சி, ஐயம், தெளிவு, குறிப்பறிவுறுதல் கைக்கிளையா?

தொல்காப்பியர் கூறிய கைக்கிளை இலக்கணத்தைத் தெளிவாக அறிந்து கொள்ளாது, நம்பியகப் பொருள் நூல், கைக்கிளை பற்றித் தவறான கருத்துக்களை வலியுறுத்தி வளர்த்து விட்டது.

1.   கைக்கிளை என்பது ஒரு மருங்கு பற்றிய குற்றமற்ற காதலாகும். ஆனால் ‘காட்சி’ எனும் துறை. ஒத்த காம உணர்வு தூண்டப் பெற்ற தலைவன் தலைவி ஆகிய இருவரிடையே நிகழ்வது. ஆகையால் அது கைக்கிளை ஆகாது. காட்சி முதலியவற்றைத் தொல்காப்பியர் இருமருங்கு ஒத்த களவு நெறியில் கூறியுள்ளார்.

2.   கைக்கிளை ஆடவர்க்கே அமைவதன்றி, மகளிர்க்குக் கூறுவது தொல்மரபன்று. மகளிர்பால் ஒருதலைக் காமம் மிகுந்து, தாமே, ஆடவன்பால் சென்று தம்கழிகாமத்தை யுரைப்பது, பெண்ணீர்மைக்குப் பொருந்துவதன்று. அது கைக்கிளையாகாது. அது இழிந்த காமம். ஆதலால், அதனைப் பெருந்திணைப் பாற்படுத்துவதே இலக்கண மரபாகும். எனவே, பெண்பாற் கைக்கிளை என நம்பியகப் பொருள் நூலார் வகுத்தது. தொல்காப்பியத் தூய அறநெறி மாண்புக்கு முரண்பட்டது.

பெருந்திணை என்ற பெயர்க்காரணம்

பெருந்திணை என்ற பெயர்க்கு “எல்லாவற்றிலும் பெரியதிணை. ஏனெனில் எண்வகை மணத்துள் இத்திணை ஒன்று மட்டும் நான்கு மணம் பெற்று நடத்தலின், இது பெரியதிணை எனப் பெயர் பெற்றது” என்று நச்சினார்க்கினியர் விளக்கினார். இளம்பூரணரோ, “பெருமைமிக்க திணை” என விளக்கினார். இந்த இரு விளக்கங்களும் பொருளொடு பொருந்தாதவை.

நாவலர் தரும் விளக்கம் : திணை என்பது ஒழுக்கம். இங்குப் பெருந்திணை என்பது, சிறிய ஒழுக்கத்தைக் குறிப்பதாகும். கழிகாமத்தைச் சிறுமை எனக் கூறும் மரபு, “செருக்கும் சினமும் சிறுமையும்” என்னும் குறளில் காமக்குற்றத்தைச் ‘சிறுமை’ எனலால் அறிக. இது தாழ்ந்த மாக்களின் இழிந்த ஒழுக்கம். இதனைப் பெரிய ஒழுக்கம் என்றது எதிர்மறைப் பொருளில் குறித்ததாகும். தாலி பெருகிற்று, விளக்கைப் பெருக்கு என்பவற்றுள் பெருமைச் சொல், மறுதலைப் பொருளில் வருவது போன்று