பக்கம் எண் :

476 

 [குறிப்பு : 1965ஆம் ஆண்டு, இந்நூலின் 2ஆம் பதிப்பு வெளியிட்டபோது எழுதப்பெற்ற கட்டுரை இது]

புறத்திணையியற் புத்துரை
அறிமுகம்

வித்துவான் திரு. நா. இராமையாபிள்ளை எம். ஏ. , மதுரை.

நாவலர் பாரதியாரின் தொல்காப்பியப் பொருளதிகாரப் புறத்திணையியலுக்கு அறிமுகவுரை என்ற ஒன்று இன்றியமையாததா என்னும் கேள்வி என் மனத்தில் எழாமலில்லை. இற்றைய நாளில் தமிழார்வம் கற்றார் முதல் கல்லார் வரை, சிறுவர் முதல் முதியோர் வரை, அரசியலறிஞர் முதல் சுயநலமிக்கார் வரை, யாவர்மாட்டும் நிலவியிருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியெனினும் தமிழ்மொழியின் நடை நலிந்துவருவது வருந்தற்குரிய செய்தியாயுள்ளது. முன்னைய நாளில் தமிழில் நல்ல நடை எழுதும் சான்றோரே யாண்டும் காணலாம். இன்று தெளிவான தமிழ்நடை எழுதுவாரை அருகியே காண முடிகிறது. செய்தித்தாள், மாத இதழ், வார இதழ் முதலிய யாவற்றிலும் நல்ல மொழிநடையைக் காண்டலரிது. பேசுவது போலவே எழுதல் வேண்டுமெனப் பிடிவாதம் கொள்வாரையும் காணலாம். தூய தமிழ்நடை எழுதவேண்டுமென்ற விருப்பம் இற்றையநாளில் சிலரிடம் இருப்பினும், தமிழ்க் கல்வியின் குறைவாலும், இளமையிற் பயின்ற சொற்கள் போட்டி போட்டு முன்வருவதாலும், அவற்றை நீக்கித் தூய தமிழ்ச் சொற்களைக் காண்டல் சிறிது துன்பமாக இருப்பதாலும், துன்பத்தைப் பொருட்படுத்தாமல் முயன்றால் கருத்துப்போக்குத் தடையேற்படுகிறது என்ற காரணத்தாலும் வாளா வந்தநடையை எழுதிவிடுகின்றனர். இவ்வாறு தமிழ் நடையை நன்கு பேண முடியாமற் போகிறது. எனவே, நாள்தோறும் தமிழ்நடை நலிந்துகொண்டு வருகிறது. இதன் காரணமாகப் பண்டைய நூல்களிலுள்ள தமிழ்நடை பலருக்கு விளங்காமற் போகிறது. அப்போது விளக்கம் தேவைப்படுகிறது. இப்படி நூல்களின் உரைக்கு, உரை தேவைப்படுகிற காலமாக இக்காலம்