பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை477

மாறிவருகிறது. இந்த வகையில் சேர்ந்ததன்று நாவலர் பாரதியாரின் புத்துரை. நாவலர் பாரதியாரின் நல்லுரை தொல்காப்பியத்திற்கு ஏற்பட்டிருந்த முன்னைய இளம்பூரணர், நச்சினார்க்கினியர் என்னும் இருசான்றோர்களின் உரைகளிலுள்ள பொருந்தாக் கொள்கைகளையும், அடிப்பட்ட தமிழ் முன்னோர்களின் கருத்துக்களுக்கு மாறானவற்றையும் நீக்கிப் பொருந்தும் கொள்கைகள் இவைதாம் எனக்காட்டிப், பண்டைத்தமிழ் நூல்களிலிருந்து அவற்றிற்குச் சான்றும் காட்டி நிறுவுவதேயாகும். நாவலர் பெருமானின் இப்புத்துரை நூலைப், பொருள் நோக்கோடு பார்ப்போமானால், தொல்காப்பியம் கற்றார் மட்டுமே நன்கு உணர்ந்து கொள்ள முடியும். மற்றையார் இதைக் கற்க விழையார். நாவலர் பாரதியாரின் புறத்திணையியற் புத்துரை நூலின் உரைநடை, பண்டைய உரையாசிரியர்களின் நடையை ஒப்ப விளங்குகிறது. இதனைக் கற்றார் தவிர மற்றார் புரிந்துகொள்ள முடியாதெனின், கற்றாருக்கு அறிமுகம் வேண்டுவதில்லை; மற்றாருக்கு இந்நூல் கற்க விழைவில்லாத காரணத்தால் அவருக்கும் அறிமுகம் வேண்டுவதில்லை. எனவே இவ்வறிமுகம் தேவையற்றவொன்று எனின் இதை நான் எழுதக் காரணம் கூறுவன்.

நாவலர் பாரதியார் இல்லறத்தின் நல்லறத் துணைவியாய் விளங்கிய உயர்திருவாட்டி ச. சோ. வசுமதி பாரதியார் அவர்கள் “ஐயா அவர்களின் நூலுக்கு ஒரு அறிமுகம் எழுதவேண்டும்” என்று எனக்கிட்ட ஆணை என்னால் மறுக்க முடியாதது முதற் காரணம். இப்புத்துரை நூல் 1942இல் அச்சாகி வெளிவருதற்கு முன்பு இதனை நாவலர் பெருமான் ஆய்ந்து வாய்மொழியாகக் கூறக் கேட்டு நான் எழுதிவந்த ஆசைத் தொடர்பு இரண்டாவது காரணம். பலமுறை இந்நூலைப் படித்திருந்தாலும் மற்றுமொருமுறை படிக்க வாய்ப்பேற்படுகிறதே என்ற மகிழ்ச்சி மூன்றாவது காரணம். இவ்வறிமுகம் எழுதும்போது இதன் பெருமையை எடுத்துக்கூற வாய்ப்பேற்படுகிறதே என்பது நான்காவது காரணம். இன்ன பல காரணங்களாலேயே எழுதத் துணிந்தேன். இவற்றைத் தவிர இவ்வறிமுகம் எழுதுவதற்கு எனக்கு எவ்விதத் தகுதியுமில்லை.

இனி, நாவலர் பாரதியாரின் உரைநலம்பற்றி நோக்குவோம். தொல்காப்பியர் பொருட்படலம் - புறத்திணையியலில் முதன்முதலில் அவர்கள் தொகுப்பாக, புறத்திணைபற்றி எழுதுவதை யாவரும்