| 478 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
ஊன்றிப் படித்து உணர வேண்டும். ஏனெனின் தொல்காப்பியர் புறத்திணை ஏழு என்று சொல்லியிருக்கப் பிற்காலத்தவர் ஏழுக்கு மேற்பட்டவற்றைப் புறத்திணையில் கூறுகின்றனர். இரு கூற்றையும் கண்டு, அதையதை அப்படியப்படியே கொண்டு வாழ்வாரும் உண்டு. பண்டைத் தமிழர் கொண்ட கொள்கை எது எனச் சிந்தியாமல், சிந்தனையுள்ள தமிழ் இளைஞர்களுக்கு வழி காட்டாமல் வாழும் தமிழறிஞர் பேதைமையைச் சுட்டிக்காட்டி, எழுதிணையின் இறந்தவை பழுதுற்ற கொள்கை எனக் காட்டியிருக்கும் நாவலரின் நல்லுரை, தமிழ்மொழியின்மாட்டும் தமிழறக்கொள்கைகளின்மாட்டும், தொல்காப்பியர் மாட்டும் ஈடுபாடுடைய சான்றோர்களுக்கு இன்பமாய் இருக்கும். பசுக்கூட்டத்தைக் கவர்ந்துசெல்வாரிடமிருந்து மீட்கமுயல்வார் செயல் வெட்சியுள் அடங்காது கரந்தை என்னும் திணையில் அடங்குமென வேறொரு திணை உண்டாக்கிக்கூறும் பிற்காலத்தார் கொள்கை தொல்காப்பியரால் ஒப்பமுடிந்ததன்று என்று நாவலர் பாரதியார் விளக்கிக்காட்டுவதை நயன்தெரிந்த நல்லோர் பயன் நிறைந்த கூற்று எனக் கொள்வர். 1940ஆம் ஆண்டு இரண்டாவது உலகப் பெரும்போர் நடந்து கொண்டிருக்கும் காலம், யான் நாவலர் பாரதியாரோடு இருந்து இப்புத்துரையின் உரையை எழுதிக் கொண்டிருக்குங் காலம். நல்ல நாவன்மையுடைய நல்லார் ஒருவர் பசுமலையில் வாழ்ந்து கொண்டிருந்தார். அவர் அடிக்கடி நாவலர் பாரதியார் இல்லம் வந்து உரையாடிக் கொண்டிருப்பார். நல்ல தமிழ் நூல்களின் கருத்தை நாவலர் பாரதியார் நவிலச் செவி வாயாகக் கொண்டு நெஞ்சு களனாக அவர் ஏற்றுக் கொள்வார். அவை அவரின் சொற்பொழிவுகளுக்கு உதவும் என்பது அவர் கருத்து. பூவொடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்பதற்கிணங்க நாவலர் பாரதியாரோடு இருந்த என்னை அவர் நன்கு மதித்தார்; உயர்வாகப் போற்றினார். உயர்ந்த தொல்காப்பியர் நூல்களை நாவலர் பாரதியாரோடு இருந்து அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கிருக்கிறது என்று பாராட்டினார். ஆகவே என்னை எங்குக் கண்டாலும், யாரோடு கண்டாலும் எனக்கு அவர் மரியாதை செலுத்துவதோடு பிறருக்கும் என்னை உயர்வாக அறிமுகப்படுத்தி வைப்பார். இதன் காரணமாக அவர்பால் எனக்கு இயல்பாக அன்பு எழுந்தது. நானும் சில வேளைகளில் அவர் இல்லத்திற்குச் சென்று உரையாடிக் கொண்டிருப்பது வழக்கம். |