பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை479

ஒருநாள் மாலை நான்கு மணியிருக்கும். நானும் அவரும் அவரது இல்லத்தில் உரையாடிக் கொண்டிருந்தோம். தொல்காப்பியத்தில் ஒன்று கூறுமாறு என்னிடம் வேண்டினார். “வெறியறி சிறப்பின் வெவ்வாய்வேலன் வெறியாட்டயர்ந்த காந்தளும்” என்ற தொல்காப்பியர் வெட்சித் திணைச் சூத்திரத்தைக் கூறினேன். பொருள்கூறச் சொன்னார். “குறித்த போரில் கொற்றம் கருதிச் ‘செறுமிகுசேயா’ன முருகனை முதலில் பரவி, அவனுக்குரிய களியாட்டில் குறியுணர்ந்துகூறும் சிறப்பினையுடைய விரும்பத்தகும் வாய்ப்புணர்த்தும் வேலன் ஆடும் காந்தருளும்” என்ற நாவலர் பாரதியாரின் நயவுரையைக் கூறினேன். அதுகேட்ட அவர், தொல்காப்பியத்தின் பெருமையையும் நாவலர் பாரதியாரின் நயவுரையையும் நானிலமறியும் நன்னாளே தமிழ்நாட்டின் பொன்னாளாம் எனக்கூறி மகிழ்ந்தார்.

இனி, வெட்சித்திணையில், “படையியங்கரவம்” என்று தொடங்கும் சூத்திரத்தில் நுவல்வழித் தோற்றம் என்னும் துறை வருகிறது. நுவல்வழித் தோற்றம் என்பது களவில் ஆனிரைகொண்டு தம்மவர் புகழும்படி வெட்சியார் மீளும் பொலிவு, எனப்பொருள்படும். இத்துறைக்கு நாவலர் பாரதியார் சான்று தேடிக்கொண்டிருக்கும்போது நான் கீழ்வரும் பாடலைக் காட்டினேன்.

“ஒன்னார் முன்னிலை முருக்கிப் பின்னின்று
 நிரையொடு வரூஉம் என்ஐக்கு
 உழையோர், தன்னினும் பெருஞ்சா யலரே. ”

நாவலர் பாரதியார் இதனையே ஏற்று அமைத்துக் கொண்டார்கள். நான் அன்று, துறையின் பொருளறிந்து எடுத்துக் காட்டினேன் என்று சொல்ல முடியாது. ஏதோ காட்டினேன், அமைந்து கொண்டது. இதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி. இது என் நினைவிலிருந்து மாறவில்லை.

இனி, நாவலர் பாரதியாரின் கூர்த்த மதியைக் காணக் கீழ்வருவது ஒரு சான்று.

“மறங்கடைக் கூட்டிய துடிநிலை சிறந்த
 கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே. ”