பக்கம் எண் :

480நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

என்னும் புறத்திணையியல் நான்காம் சூத்திரத்தின் ஈற்றயற்சீரில் வரும் அகரச்சுட்டிற்குக் கூறும் விளக்கம் நனி சிறந்ததோடு அறிவின் கூர்மைக்கு அடையாளமாக விளங்கி நூல்நயம் நுகர்வார்க்கு இன்பவிருந்தாய் அமைகிறது.

“அகரச்சுட்டு, ‘புறன்’ என்னும் குறிப்பால் வெட்சிக்கு அகமாக முதற்சூத்திரத்தில் குறித்த குறிஞ்சியையே குறிக்கும். அகரச்சுட்டு வெட்சித்திணையைக் குறிப்பதாகக்கொண்டு, துடிநிலையும் கொற்றவை நிலையும் வெட்சிக்குப் புறனாம் என்பர் நச்சினார்க்கினியர். வெட்சியே புறனாதலானும், பொதுவியல் பாடாண் முதலியவற்றைப் புறப்புறமென வகுத்த வெண்பாமாலை முதலிய பின்னூலாரும் ‘துடிநிலை’ ‘கொற்றவை நிலை’களைப் புறப்புறமென்னாது வெட்சியின் துறைகளாய் அடக்கினராதலானும், இச்சூத்திரத்தின் அகரச்சுட்டு வெட்சிக்கு அகமாகிய குறிஞ்சியையே குறிப்பது தேற்றம்” என்பர் நாவலர் பாரதியார்.

மேற்காட்டிய நான்காம் சூத்திரம் ஈரடியாலானது. முதலடியிலுள்ள ‘துடிநிலை’ என்னும் பாடம் நச்சினார்க்கினியர் கொண்டது. ஆனால் இளம்பூரணர் ‘குடிநிலை’ என்று பாடங்கொண்டார். இக்‘குடிநிலை’ என்னும் பாடம் பொருத்தமாய் இல்லை என்று நாவலர் பாரதியார் தெரிவிக்கிறார். ‘ஆகோள்’ ‘கொற்றவை நிலை’களைப் போலக் ‘குடிநிலை’ போர்த்தொடக்கத்திற்கு இன்றியமையாததன்று என்று காட்டுகிறார் நாவலர் பாரதியார்.

அவ்வாறாயின் ‘துடிநிலை’ என்னும் பாடம் சிறந்ததல்லவா எனலாம். சிறந்தது எனக் கொள்ளுதற்கில்லை; ‘கொடிநிலை’ என்பதாக இருக்க வேண்டுமென்று நாவலர் பாரதியார் ஆய்வுரை காட்டியிருக்கிறார். இது தொல்காப்பியத்தில் ஈடுபாடுள்ளவர்க்கு அறுசுவை உண்டி போல அறிவுக்கு விருந்தாயிருக்கும்.

இனி, தும்பைத் திணை பற்றிக் கூறுமிடத்துக் கீழ்வரும் சூத்திரத்திற்கு நாவலர் பாரதியார் நயம்பட உரை கூறுகிறார். முன்னிரு உரையாசிரியர்கள் கூறிய பொருந்தாத் தன்மைகளைக் காரணம் காட்டி மறுத்துப் பொருந்தும் தன்மைகளைக் காட்டுகிறார்.