பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை481

“கணையும் வேலும் துணையுற மொய்த்தலின்
 சென்ற உயிரின் நின்ற யாக்கை
 இருநிலம் தீண்டா அருநிலை வகையோடு
 இருபாற் பட்ட ஒருசிறப் பின்றே. ”

இளம்பூரணர் உரை: கணையும் வேலும் படைத்துணையாக் கொண்டு பொருதல் காரணமாகச் சென்ற உயிரின் நின்றயாக்கை, நீர் அட்டை காலவயப்பட்டு உடலினின்று உயிர் பிரிக்கப்படுமாறு, இருபாற்படுக்கப்படும் அற்றதுண்டம் இணைந்தது போன்று ஆடலொத்த பண்பினையுடைது. (இருநிலம் தீண்டா அரு = நீருட் கிடக்கும் அட்டை)

நச்சினார்க்கினியர் உரை: பலரும் ஒருவனை அணுகிப் பொருதற்கஞ்சி அகல நின்று அம்பானெய்தும் வேல் கொண்டெறிந்தும் போர்செய்ய, அவ்வம்பும் வேலும் ஒன்றோடொன்று துணையாகத் தீண்டுமாறு செறிதலின், சிறிதொழியத் தேய்ந்த உயிரானே துளங்காது நிலைநின்ற உடம்பு, வாளும் திகிரியும் முதலியவற்றால் ஏறுண்ட தலையேயாயினும் உடலேயாயினும் பெரிய நிலத்தைத் தீண்டாதெழுந்து ஆடும் உடம்பினது பெறற்கரும் நிலையுடைத்தாகிய கூறுபாட்டோடே கூடி இரண்டு கூறுபட்ட ஒரு சிறப்பிலக்கணத்தை யுடைத்து முற்கூறிய தும்பைத் திணை என்றவாறு.

“எனவே, முற்கூறியமைந்து பொருளாகப் பொருதலினும் நின்றயாக்கை சிறத்தலும் இருநிலந் தீண்டா யாக்கை அதனிற் சிறத்தலும் கூறினார். இது திணைச் சிறப்புக் கூறியது. ‘மொய்த்தலின்’ என்றது யாக்கையற்று ஆடவேண்டுதலிற் கணையும் வேலுமன்றி வாள் முதலியன ஏதுவாகக் கொள்க. பிற்கூறியதற்கு அட்டை அற்றுழியும் ஊருமாறுபோல் அற்றுழியும் உடம்பாடுதலின் அட்டையாடல் எனவும் இதனைக் கூறுப” என மேலும் விளக்கினர் நச்சினார்க்கினியர்.

நாவலர் பாரதியார் உரை : அளவிறந்த அம்பும் வேலும் செறிந்து அடர்தலின், பிரிந்த உயிரினின்றும் நீங்கிய பின்னும் வீழாது நின்ற உடலின் அரிய நிலைப்பரிசு (அறுபட்ட தலை முதலிய உறுப்புக்கள்) பெருநிலம் படியாது முறுகிய இகல் முனைப்பால் துடித்தியங்கும் அரிய நிலைமையாகிய பரிசுடன் இவ்விரண்டு கூறுபட்ட ஒப்பற்ற சிறப்பினையுடைத்து தும்பைத் திணை.