| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 483 |
என்பதை எவ்வளவு தெளிவாக விளக்கிக் காட்டுகிறார் என்பது கற்றார்கண்டு கழிபேருவகை கொள்ள வேண்டியதாகும். “அமரர்கண் முடியும் அறுவகையானும்” என்ற 26ஆவது சூத்திரத்திற்கு நாவலர் பாரதியார் தந்த புத்துரை என்னால் எளிமைப்படுத்தப்பட்டுமதுரை மாவட்டத்தமிழாசிரியர்மன்றத்தார் 16-10-64ந் தேதி வெளியிட்டுள்ள ஆண்டு மலரில் வெளியிடப்பட்டுள்ளது காண்க. இனி, “ஊரொடுதோற்றமு முரித்தென மொழிப” என்பதை ஒரு தனிச்சூத்திரமாக்கி நச்சினார்க்கினியர், “ஊரில் பொது மகளிரோடு கூடிவந்த விளக்கமும் பாடாண் திணைக்குரித்து” எனக் கூறுகிறார். இதை நாவலர் பாரதியார் கடுமையாக மறுக்கிறார். இப் புதுப்பொருள் தமிழ் அறமும் பழ மரபும் அழிய வரும் இழுக்காகும். பரத்தை ஒருத்தியே யன்றிப் பலரொடும் வாழ்வார் இருக்கலாம். அன்னாரும் அவ்வாழ்வை நாணாமல் ஊரறியக்காட்டி அதைப் பாராட்டும் உயர் ஒழுக்கமாகக் கருதும் பேதைமைக்கு ஆளாகார்; அவ்வளவு நாணற்ற கீழ்மக்கள் உளராயின், அவர் கயமையைப் பாடாண் திணைக்கு உரித்தெனப் புலவர் தலைவரான தொல்காப்பியர் கொள்ளார். அக் கயவர் வாழ்வு திருநீக்கப்பட்டார் தொடர்பாக வெறுக்கப்படுவதே தமிழ் அற மரபாகும்”. இவ்வாறு தமிழ் மரபு கூறி நாவலர் பாரதியார் நச்சினார்க்கினியரின் தவறான உரையைப்போக்கித் தக்கவுரை கூறித் தமிழ் மக்கள் அறப்பாங்கைப் பாதுகாக்கின்றார். ‘வழக்கொடு சிவணிய வகைமையான” என்ற வரியையும் சேர்த்து ஈரடிச் சூத்திரமாக்கிப் பாரதியார் உரை கூறுகிறார். எனவே அச்சூத்திரம் வருமாறு, அதன் எண். 30. “ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப வழக்கொடு சிவணிய வகைமை யான. ” பொருள் : தலைமக்களின் ஊர்ச்சிறப்பும் உயர்குடிப் பிறப்பும் பாடாண் திணையில் பாராட்டுக்குரிய எனக் கூறுவர் புறநூற்புலவர், அப்பாராட்டு புலனெறி வழக்கொடு பொருந்தும் பகுதிகளில். இனி, 32ஆவது சூத்திரத்திற்கு நாவலர் பாரதியார் கண்ட ஆராய்ச்சி பொன்னேபோற் போற்றும் தன்மையுடையது, அச்சூத்திரம் : |