| 484 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
“கொடிநிலை காந்தள் வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே. ” இதன் முதலடியில் காந்தள் என்ற இடத்தில் ‘கந்தழி’ என்ற சொல் இருக்கும். ‘கந்தழி’ என்றே இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் பாடங்கொண்டு வெவ்வேறு பொருள் கூறுகின்றனர். இது பொருந்தாது என்று நாவலர் பாரதியார் ஆய்ந்து உரை தருகிறார். இந்த ஆய்வுரை தஞ்சாவூரையடுத்த கரந்தட்டாங்குடியிலிருக்கும் கரந்தைத் தமிழ்ச் சங்க வெளியீடான சஞ்சிகையிலும் வெளிவந்துள்ளது. இந்த ஆராய்ச்சி ஒன்றுக்கே தமிழ்நாட்டு மக்கள் நாவலர் பாரதியாருக்குக் கடமைப்- பட்டவர்களாவார்கள். நாவலர் பாரதியார் கருத்துக்களை நன்கு ஆராய்ந்து தமிழ் அற மரபுபேணி உரை வகுத்தார் என்றும், உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியரின் தவறான உரையை மறுப்பதற்கு அஞ்சாமல் மறுத்துத் தக்க உரை கூறினார் என்றும் இதுவரை கண்டோம். அவற்றோடு சொற்பொருள் கருதி ஆய்ந்து விளக்கந்தரும் நயத்தையும் இனிக் காண்போம். “தாவில் நல்லிசை கருதிய கிடந்தோர்க்குச் சூதர் ஏத்திய துயிலெடை நிலையும் கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் . . . . . . . . . . . . . . . . . . . . ” என 35ஆவது சூத்திரம் கூறுகிறது. இதனில் கூறப்படும் கூத்தர், பாணர், பொருநர், விறலி எனப்படுவார் பற்றிய நாவலர் பாரதியார் விளக்கத்தைக் காண்க. கூத்தர் - பிறர் ஒப்புக் கருதாது, பேசாமல் பாடாமல் மெய்ப்பாட்டால் அவிநயித்து ஆடுபவர். பாணர் - இசைபாடுவோர். இவர்தம் பாட்டும் கையாளும் இசைக்கருவியும் கருதி இசைப்பாணர் - யாழ்ப்பாணர் - துடிப்பாணர் அதாவது மண்டைப்பாணர் எனப் பலதிறப்படுவர். யாழ்ப்பாணர் தம் யாழ்பற்றிச் சீறியாழ்ப்பாணர் அல்லது சிறுபாணர் - பேரியாழ்ப் பாணர் அல்லது பெரும்பாணர் என்றிருவகையினராவர். |