தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 485 |
பொருநர்: நாடகத்தில் குறித்த ஒருவரைப் போல நடிப்பவர். (பொருந் = ஒப்பு) விறலி : இசைக்கேற்ப ஆடுபவள். (விறல் = உள்ளுணர்வை மெய்ப்படக் காட்டுந் திறன். அத்திறனுடையார் விறலியர்) இவ்வாறு ஒல்காப் புகழுடைத் தொல்காப்பியர் நூலுக்கு நாவலர் பாரதியார் நவிலும் நயவுரைகள் நானிலமுள்ளளவும் நிலவி நிற்கும். ஒவ்வொரு சொல்லையும் ஒவ்வொரு நூற்பாவையும் அறிவெனும் நாவால் அசைத்துச் சுவைத்து முன்னைய உரையாசிரியர்களால் எழுந்த பொருத்தமற்ற உரைகளைப் போக்கி நல்லவைகளை ஆக்கி நானில மக்களுக்கு நயத்தொடு நல்கியுள்ளார். அக் கடமைப்பாட்டில் முன்னைய உரையாசிரியர்கள் தவற்றைத் துணிந்து மறுத்தும் நயவுரைகளைப் போற்றியும் அமைத்துக்கொண்ட அருமைகள் பெரிதும் பாராட்டிப் போற்றற்குரியன. இந்தத் துணிவு தொல்காப்பியர் நூல் தோன்றி உரை வகுக்கப்பட்ட காலத்திற்குப் பின் எண்ணூறாண்டுகளாக எவருக்கும் தோன்றாமல் நாவலர் பாரதியாரிடமட்டுமே தோன்றியுள்ளதாகும். துணிவு என்பது ஏதாவதொன்று கூறி விடுவதென்பதன்று. சொல்லப்பட்ட செய்தி மறுக்க முடியா திருக்க வேண்டும். அதுவே துணிபாகும். நாவலர் பாரதியார் தொல்காப்பியப் புறத்திணையியல் ஆராய்ச்சியுரை தமிழ்நாட்டில் வந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாயிற்று. இதுவரை இவ்வுரையை மறுத்தார் எவருமில்லை. பொதுவாக, நாவலர் பாரதியார் ஆராய்ச்சிக் கருத்து எதனையும் இதுவரை மறுத்தாரில்லை. மறுக்க முடியாததாக அமைவதே நாவலர் பாரதியாரின் ஆராய்ச்சியாக இருக்கும். மறுக்கக் கூடிய ஆராய்ச்சியை ஆராய்ச்சி எனலாமா?பொறாமையின் காரணமாக ஒப்புக்கொள்ளாமல் இருக்கலாம். அது மறுத்ததாகாது. இவ்வாறான ஆராய்ச்சியைக் கைம்மாறு கருதாது நல்கிய நாவலர் பாரதியாருக்கு நன்றி செலுத்தி அடியிலிருந்து முடியும் வரை தமிழ்மக்கள் நுகர்வார்களாக! |