490 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
‘நானான் கென்ப’ என்பதனை உரையாசிரியர்கள் ‘பதினாறு’ எனப் பொருள் கொள்ள, இவரோ “நாலுநாலாய்த்தொகுத்தெண்ணப்படும்” என்று கூறி “நான்கு என்பதன்முன் வரும் நான்கு, ‘நானான்கு’ ஆவதன்றி, ‘நந்நான்கு’ ஆவது, பிற்காலப் பேச்சுவழக்கு” என விளக்கமும் தந்து, “முப்பத்திரண்டு பொருளும், புறத்தே மெய்ப்பாடாய்ப் புலனாதல் கொண்டே அறியப்படுதலானும், அவ்வாறு புலனாங்கால் அவை தனித்தனியே எள்ளற்குறி இளமைக்குறி பேதைமைக் குறி மடமைக் குறி என்று ஒவ்வொன்றும் வெவ்வேறாய்த் தனக்குரிய தனிக்குறியால் தோன்றாமல், நானான்காய்ப்பண்ணைகூடி நகை - அழுகை - இளிவரல் - மருட்கை - அச்சம் - பெருமிதம் - வெருளி - உவகை எனும் மெய்ப்பாடு எட்டுவகையால் மட்டும் தோன்றுதலானும், இவ்வியல்நெறி குறித்தல் வேண்டி இவ்வாறு கூறப்பட்டதென்க!!” என நயமும் தெளிக்கின்றார் நாவலர்! “சுவைப்படுபொருள், சுவை, குறிப்பு, சத்துவம்” எனப் பகுத்துரைக்கும் இளம்பூரணர்தம் கருத்தையும் இனிதாய் மறுத்துரைக்கின்றார் இவர்!“எண்ணான்கு பொருளும் ஓராங்கே ஒருங்கெண்ணப்படுதலின், அவை ஒருதரப் பொருளாதல் ஒருதலை. அதற்கு மாறாக அவற்றைச் சுவையூட்டும் புலி முதலிய புறப்பொருள் வேறு . . . தம்முள் ஒவ்வா நால்வகையாய் உறழப் பிரித்தல் இங்குத் தொல்காப்பியர் கருத்தாமாறில்லை!. . . எண்வகை மெய்ப்பாடுகளை எனைத்து வகைப் புறப் பொருள்களொடும் கூட்டவும் பெருக்கவும் வேண்டா!” - இங்ஙனம் இவர் உரைக்கும் உரை ஏற்புடைத்தென்பதனை, அடுத்து வரும் “எள்ளல் இளமை பேதைமை மடனென், றுள்ளப் பட்ட நகைநான் கென்ப” முதலான எண்வகை மெய்ப்பாடுகளை விளக்கும் நூற்பாக்கள், ‘நான்கு நான்கு’ எனத் தொகுத் தெண்ணப் படுவனவற்றால் தெளியலாம்! (3) ‘நாலிரண் டாகும் பாலுமா ருண்டே’ என்ற நூற்பாவுக்கு, “மேற்சொல்லப்பட்ட பதினாறு பொருளும் எட்டென வரும் பக்கமுமுண்டு; அவையாவன குறிப்புப் பதினெட்டனையுஞ் சுவையுள் அடக்கிச் சுவையெட்டுமாக்கி நிகழ்தல்” என இளம்பூரணரும், “முப்பத்திரண்டு மெய்ப்பாடும் பதினாறாதலேயன்றி எட்டாதலும் உண்டு; அவை வீரம், அச்சம், வியப்பு, இழிபு, காமம், அவலம், நகை, நடுவுநிலை யென்பன”எனப் பேராசிரியரும் உரை கூறினர். |