பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை493

பு; வ்வெட்டாய், முறையே இயற்கைப் புணர்ச்சியும் இடந்தலைப்பாடும் பாங்கொடு தழாஅலும் தோழியிற் புணர்வுமென்றாங் கந்நால்வகையினு மடைந்த சார்பொடு; கண்ணிய நால்வகைக் கேற்பத் தொகுக்கப்பட்டுள”என நயவுரையுங் காட்டுவர் நாவலர்.

(4)    ‘உடை பெயர்த்துடுத்தல்’ (நூற்பா 14) என்பதற்கு இளம்பூரணர் ‘ஆடையைக் குலைத்துடுத்தல்’ என்றும், பேராசிரியர் ‘உடுத்த உடையினைப் பலகாலும் அழித்துடுத்தல்’ என்றும் உரைகூறிப் போந்தனர். நாவலரோ, “அழியும் உணர்வால் குழையும் உடலில் குலையும் கலையின் நிலையைத் திருத்தி அணிதல்” என்று கூறியதனோடமையாது, “பெயர்த்து என்பது மீட்டும் என்பதைக் குறிக்கும்; அழித்து எனக் கொள்ளுதல் அமைவுடைத்தன்று. முன் கட்டியுள்ள ஆடை நெகிழ்வதை மீட்டும் இறுக்குதல் என்பதே பொருந்திய பொருளாகும்; அவ்வாறன்றி ஆடையைத் தலைவனெதிரில் தலைவிதானே அழித்துடுத்தல் பெண்ணீர்மையன்றாதலின் அது பொருளன்மை தேற்றம்!” என விளக்குவது எத்துணை இன்பம் பயப்பதாக வுள்ளது!

(5)    இவ்வாறே ‘அல்குல் தைவரல்’ என்பதற்கு, “மேலது உடை பெயர்த்துடுத்தலாகலான் அதன் வழித் தோன்றுவது உடை பெரிதும் நெகிழ்ந்து காட்டுதலாயிற்று; அதனைப் பாதுகாத்தலின் அவ்வற்றம் மறைக்கும் கையினை ‘அல்குல் தைவரல்’ என்றானென்பது பேராசிரியர் உரை. இளம்பூரணரும் ‘அவையல் கிளவி’யாகக் கொண்டு உரைகூறுவர். இவ்வுரை பொருந்தாது எனக் கருதிய நாவலர், “கலையின் மேலணிமேகலை தன்னொடு, தழையின் ஆகிய மேலுடை தொடுவது இருப்பிடம் (ஆசனம்) ஆவதன்றி, இடக்கர்ப் பொருள் குறிப்பதன்று என்பது தேற்றம் . . . . . . பொன்னொடு மணிமிடைந்த மேகலை இழைகளும், கலையின் மேலணி தழையுடை வகைகளும் அசைந்தாடும் உறுப்பெனக் குறிப்பதாலும், இடக்கரென அடக்காமல் அல்குலெனச் செய்யுளில் பல்காலும் வருதலானும் ‘அல்குல்’ அவையல்கிளவி யாகாமையும், இருப்பு உறுப்பையே சுட்டுதலும் தெளிவாகும் . . . எனினும் அல்குறை அவையல்கிளவியாக்கி அவிழ்த்து உடை நெகிழ்த்தவள் தன் அற்றம் மறைப்பதே அல்குல் தைவரல் என்பர் பேராசிரியர். கற்பிறவாக்குலமகள் மணவாத் தலைவன்முன் மறந்தும் அது செய்ய ஒல்லாள். குலையும்கலை நிலையைத் திருத்துவதியல்பு. தலைவன் எதிரில்