பக்கம் எண் :

494நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

தலைவி உடை அவிழ்த்துத் திருத்தாளாதலின், அற்றம் மறைப்பதும் அதற்கு அல்குல் தைவரலும் அவன் எதிரில் அவள் எஞ்ஞான்றும் எண்ணவும் ஒல்லாள், அதனால் அஃதுரையன்மை அறிக!” எனப் புத்துரை காண்பது பொருத்தமாயுள்ளதன்றோ?

‘தெய்வமஞ்சல்’ என்பதற்குச், “சூள் பொய்த்தல் பரத்தையர் கூட்டம் முதலிய தலைவன் தவறுகளுக்குக் கடவுள் அணங்குமெனத் தலைவி அஞ்சுவதாம். தெய்வம் தொழாது கணவற்றொழுவதே நல்லில்லாட்டியர் தொல்லறமாதலின், தெய்வம் பரவுதல் என்னாது அஞ்சல் என்று அமையக் கூறிய பெற்றியும் கருதற்பாற்று” என இவர் கூறுவது சிந்தனைக்கு விருந்தாயுள்ளது.

இங்ஙனமே இவர் காட்டும் நயவுரைகள் பலகண்டு நமதுள்ளம் மகிழ்கின்றது!

முன்னோர் மொழிந்த மொழிபொருள்

நாவலர் பாரதியார் நூற்பாத் தொறும் புத்துரை கண்டாலும், முன்னைய உரையாசிரியர்களான இளம்பூரணர், பேராசிரியர் போன்றோர் மொழிந்த கருத்துக்களில், ஏற்பனவற்றை எடுத்துரைக்கவும் தவறினாரல்லர். சான்றாகச் சில காட்டலாம்:

(1) “இச்சூத்திரப் பொருள் இதுவே யென்பது இதன்கீழ் இளம்பூரணர் தரும் குறிப்பானும் தெளிவாகும்!”(2)‘நகையே’ எனும் நூற்பாவின் கீழ்ப் பேராசிரியர் சுட்டும் குறிப்பினை அப்படியே எடுத்துக் காட்டுகின்றார் நாவலர். “இது பிறர் வேண்டுமாற்றானன்றி இந்நூலுள் இவ்வாறு வேண்டப்படும் மெய்ப்பாடு என்பது உணர்த்துதல் நுதலிற்று எனப் பேராசிரியரே கூறுதலாலும் விளங்கும். ” என்று காட்டுகின்றார். (3) “முன் சூத்திரத்திலிதை இளிவென்னாது இழிவென்றே இளம்பூரணர் கொண்ட பாடத்தானும் இவ்வுண்மை வலியுறும்”. (4) “இஃது இப்பொருட்டாதல் இளம்பூரணருக்கும் கருத்தென்பது அவர் உரைக் குறிப்பால் அறிக. ”(5) ‘இவையும் உளவே’ என்பது பிந்திய பேராசிரியர் பாடமாயினும் ‘அவையும் உளவே’ என்பதே அவருக்குக் காலத்தால் முந்திய இளம்பூரணர் கொண்ட பழைய பாடமாகும்!”(6) “இது பேராசிரியர்க்கும் கருத்தாதல், ‘வேண்டியவாறு கூட்டம் நிகழப் பெறாமையின், தலைமகனொடு