496 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
செய்யுட்களைச் சான்றாகக் காட்டுவது. நாவலர் பாரதியாரின் இயல்பாகும். இஃது இவரது நுண்மாண் நுழைபுலத்தையும், பன்னூற் பயிற்சியையும் அறியத் துணைபுரியும்! ‘எள்ளல்’ என்பதற்கு இளம்பூரணர், ‘நகையா கின்றே தோழி’ எனும் நெடுந்தொகைப் பாடலையும்; பேராசிரியர், ‘எள்ளி நகினும் வரூஉம்’ (கலித். 61), ‘நல்லை மன்னென நகூஉப்பெயர்ந் தோளே’ (அகம். 248) என்ற பாடல்களையும் சான்றாகக் காட்டுவர். நாவலரோ, ‘ஊரன் . . . . தாய்க்கே’ எனக் குறுந்தொகைப் பாடலை (எண் 8)க் காட்டுவர். இவ்வாறே, நூற்பாத் தோறும் பெரும்பாலும், புதிய பல எடுத்துக் காட்டுக்களைக் காட்டிச் செல்வர்! இவர் எடுத்தாண்டுள்ள நூற்பட்டியலைக் காணுமிடத்து, இவர்தம் புலமைத்திறத்தை ஒருவாற்றான் அறியக்கூடும்! இலக்கண நடை நூலுக்கு உரைகாண வந்த உரையாசிரியரனைவரும், இலக்கண நடை காட்டி எழுதுவது மரபு. “பண்ணைத் தோன்றிய கண்ணிய புறன் எனப் பெயரெச்ச அடுக்காகக் கூட்டுக. அன்றியும், எண்ணான்கு பொருளுங் கண்ணிய புறன் என ஒருசொல் நடையாக ஒட்டித், தோன்றிய என்னும் பெயரெச்சத்திற்கு முடிபாக்கினும் அமையும். புறன் என்னும் எழுவாய் நானான்கென்னும் பயனிலை கொண்டு முடிந்தது!”இஃது இளம்பூரணர் காட்டும் இலக்கண நடை (மெய்ப். நூற்பா1). “எண்ணு நிலைவகையால் தொகைபெற்ற நான்கென்னும் எழுவாய்க்கு மூன்றென்பது பெயர்ப்பயனிலையாய் வந்தது” - இது, பேராசிரியர் காட்டும் இலக்கண நடை (மெய்ப். நூற்பா. 15). “இனி, வினையுயிர் என்பதை உம்மைத் தொகையாக்கி, ‘செயலும் உயிரும் ஓய்ந்து கையறு நிலையில்’ என உரை கொள்ளினும் அமையும். ஈற்றேகாரம் அசை, ‘இன்மையும்’ என்பதன் உம்மை எதிர்மறைப் பொருட்டு; உண்மையே பெருவழக்கென்பது ‘உம்மை’க் குறிப்பு”. இது நாவலர் பாரதியார் காட்டும் இலக்கண நடை. |