தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 497 |
இனி, நாவலர், நூற்பாவுக்கு உரை கூறுங்கால், (1) கருத்து (2) பொருள் (3) குறிப்பு என மூவகையாகப் பகுத்துக் கொள்வார். ‘நூற்பா நுவலும் கருத்து இஃது’ எனக் ‘கருத்து’ என்ற பகுதியிலும்; ‘பதவுரை’யினைப் ‘பொருள்’ என்ற பகுதியிலும்; ‘விளக்கவுரை, மேற்கோள், சான்று’ முதலானவற்றைக் ‘குறிப்பு’ எனும் பகுதியிலும் விளக்குவது, படிப்போர்க்குப் பெரு விருந்தாய் அமைவன. இவ்வாறே நூல் முழுமையும் நாவலர் பாரதியார் அரிய பல நயவுரைகளை அள்ளி வழங்குகின்றார். இவற்றைப் படிக்கும்போது, தொல்காப்பியநூல் முழுமைக்குமே இவர் உரை எழுதியிருந்தால், எத்துணைப் பெரும்பயன் கிட்டியிருக்கும் என்ற உணர்வு தோன்றாமற் போகாது. எனினும் இவர் எழுதிய ‘மூவியற் புத்துரை’ தமிழகம் உள்ளளவும் நின்று நிலவத் தக்கது!இத்தகு உரையினைப் படித்து, ஆராய்வது - மேலும் புத்தம் புதிய பொருளுரைகளைக் கண்டுமகிழ்வது தமிழ் ஆய்வாளர்களின் கடனாகும்!இவ்வகையில் நாவலர் ச. சோ. பாரதியாரவர்கட்குத் தமிழ்ப் பெருமக்கள் என்றும் கடப்பாடுடையராவர்! |
வாழ்க தொல்காப்பியர் ! | வாழ்க நாவலர் பாரதியார் ! |
|